Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக கொடிக்கம்பம் : ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் தாமதம்

Print PDF

தினமலர் 06.05.2010

ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக கொடிக்கம்பம் : ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் தாமதம்

தாராபுரம் : தாராபுரத்தில் பை-பாஸ் ரோடு அகலப் படுத்தும் பணிக்கு 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், நான்கு மாதமாக ரோடு விரிவாக்க பணிகள் துவக்கப்படாமல் உள்ளன.தாராபுரம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் முன் செல்லும் பை- பாஸ் ரோட்டை பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அகலம் குறைவாக உள்ள ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத் துள்ள பலரும், கடைகளின் முன்பகுதியில் பந்தல் அமைத்தும், பஞ்சர் கடை உரிமையாளர்கள், பயன்படுத்த முடியாத டயர்களையும் ரோடு வரை அடுக்கி வைத்துள்ளனர்.

மேலும், பஸ் ஸ்டாண்ட் முன் தி.மு.., - .தி.மு.., - .தி.மு.., - காங்., உட் பட அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள் மட்டுமின்றி, தனியார் தொண்டு நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களும் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது; வாகன ஓட்டிகள், இப்பகுதியில் பயணிக்க மிகவும் சிரமப் படுகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அமராவதி சிலையில் இருந்து, கொட்டாப்புளிபாளையம் பிரிவு வரை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். இதற்காக, ஆறு மாதங்களுக்கு முன் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி, அனைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் நோட்டீஸ் அனுப் பப்பட்டது.

நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலக் கெடு முடிந்து ஒரு மாதமாகியும் இன்னும் அரசியல் கட்சியினர் தங்கள் கொடிக் கம்பங்களை அகற்றாமல் உள்ளனர். எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், குறிப் பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாத ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால், பை- பாஸ் ரோடு விரிவாக் கப் பணிக்காக 65 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கியும், இன்னும் பணிகள் துவக்கப் படாமல் உள்ளன; போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. பை-பாஸ் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, ரோடு விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 06 May 2010 06:57
 

நெடுஞ்சாலைத்துறையிடம் ரோட்டினை ஒப்படைக்க போடி கவுன்சிலர்கள் ஒப்புதல்

Print PDF

தினமலர் 04.05.2010

நெடுஞ்சாலைத்துறையிடம் ரோட்டினை ஒப்படைக்க போடி கவுன்சிலர்கள் ஒப்புதல்

போடி : போடி மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.போடி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் தலைவர் ரதியாபானு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சங்கர், கமிஷனர் சரவணக்குமார், பொறியாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

நளினி ஸ்ரீ : எனது வார்டுக்கு எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்து 4 மாதமாகியும் இன்னும் பணிகள் துவக்கப்படவில்லை.

பொறியாளர்: எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எம்.எல்.., நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட உள்ளது.

ஈஸ்வரி: மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது பெருமைக்குரியது. ஆனால் வார்டுகளில் துப்புரவு பணிகள் நடக்கவில்லை.

தவமணி: மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றினால் போதாது. தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும்.

சந்திரசேகர்: நகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்ற வகை யில் நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

ஜெயராஜ்: மயானத்தில் எரிவாயு தகனமேடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையவில்லை.

துணைத்தலைவர்: எனது வார்டில் ரோடு பணிக்கு டெண்டர் விடப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

முருகன்: பஸ்ஸ்டாண்டில் தனி நபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார். இதனை அகற்ற வேண்டும்.

கமிஷனர்: போடி மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கலாம்.

கவுன்சிலர்கள் : நெடுஞ்சாலைத்துறையும் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற முன் வர வேண்டும்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:26
 

பெரம்பலூர்-அரியலூர்-தஞ்சை சாலையை சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 30.04.2010

பெரம்பலூர்-அரியலூர்-தஞ்சை சாலையை சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு

அரியலூர், ஏப். 29: அபெரம்பலூர்-அரியலூர்- தஞ்சை சாலையை சீரமைக்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி.

அரியலூர் நகராட்சியின் 12 வது வார்டுக்குள்பட்ட பகுதியில் அண்மையில் நடைபெற்ற இலவச கலர் டி.வி.க்கள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக தஞ்சை செல்லும் மானாமதுரை சாலை அண்மையில் மத்திய அரசால் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை, மானாமதுரை சாலையில் தஞ்சையிலிருந்து பெரம்பலூர் வரை சீரமைக்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணி இன்னும் ஒரிரு மாதங்களில் தொடங்கும். அரியலூர் தொகுதியைச் சேர்ந்த 90 ஆயிரம் பேருக்கு இதுவரை இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஆயிரம் பேருக்கும் இன்னும் ஒரு மாதத்தில் இலவச கலர் டிவி வழங்கப்படும் என்றார் அவர்.

விழாவுக்கு நகர்மன்ற உறுப்பினர் தவமணி கோவிந்தன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

விழாவில் நகர பா... தலைவர் கோவிந்தன், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீதர், நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ். பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். வட்டாட்சியர் (பொ) . முத்துவடிவேலு நன்றி கூறினார்.

 


Page 127 of 167