Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதைக்கு ரூ.5 லட்சத்தில் பாலம் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 01.04.2010

பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதைக்கு ரூ.5 லட்சத்தில் பாலம் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஆழ்வார்குறிச்சி : சுமார் 20 கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் பாலம் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடையம் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகித்தார். யூனியன் வைஸ் சேர்மன் செய்யதலி பாத்திமா அமீர்கான், ஆணையாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்.,) ஜெயராமன் முன்னிலை வகித்தனர். காந்திராமன் அஜண்டா வாசித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பாண்டியன்: சேர்மன் அறைக்கு 19 ஆயிரத்து 400 ரூபாய்க்கு டேபிள், சேர் தேவையா? அநாவசியமாக செலவு பண்ண வேண்டுமா?

ஆணையாளர்: மற்ற யூனியன் அலுவலகம் சென்று பாருங்கள் எப்படி உள்ளது தெரியுமா, கூட்ட அரங்கிற்குதான் வேண்டாம் என்றீர்கள், சேர்மன் அறையில் நல்ல மேஜை, சேர், வேண்டாமா?

பாண்டியன்: மீன்பாசி குத்தகையில் மறுஏலம் நடத்தி யூனியனுக்கு 2,267 ரூபாய் நிதி சேர்த்த நல்ல விஷயங்கள் எப்போதும் ஆதரிக்கப்படும்.

சேர்மன் : நன்றி. சுமார் 20 கிராம பொதுமக்கள் நலனுக்காக பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதையில் ரூ.5 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்க கலெக்டர் உத்திரவிட்டுள்ளனர். இந்த தீர்மானங்கள் பற்றி கடும் விவாதம் நடந்தது.

பால்ராஜ்: 5 லட்சம் யார் நிதியில் கொடுப்பது.

ஆணையாளர்: ஒன்றிய பொது நிதியில் இருந்துதான் செய்ய வேண்டும்.

கதிரேசன்: அந்த அந்த பகுதி கவுன்சிலர்கள் நிதியில் செய்யட்டும்.

முருகன்: பொது நிதியில் செய்ய வேண்டாம். கவுன்சிலர் நிதியில் செய்யட்டும்.

ஆணையாளர்: பாலம் இல்லாமல் ஆற்று தண்ணீருக்கு கஷ்டப்பட்டு சைக்கிளை சுமந்து வரும் மக்களை நான் நேரில் பார்த்துள்ளேன்.

பால்ராஜ்: செய்யுங்கள், செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. கவுன்சிலர் நிதியில் செய்ய வேண்டும்.

கணேசன்: ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், பொட்டல்புதூர் கவுன்சிலர்கள் நிதியில் செய்யலாமே?

வைஸ் சேர்மன் பாத்திமா அமீர்கான்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினார்கள். கலெக்டரிடம் கேட்டுள்ளார்கள்.

பால்ராஜ்: நீங்கள் பாலம் வேண்டும் என்கிறீர்களா, வேண்டாம் என்கிறீர்களா?

ஆணையாளர்: வேண்டும், வேண்டாம் என்று சொல்வதிற்கு இல்லை. பாலம் அமைக்க வேண்டும்.

புவனேஸ்வரி: பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான ஒன்று பொதுநிதியில் அமைந்திட கூடாதா?

ஆணையாளர்: நீங்கள் ஒருவரும் நிதி ஒதுக்க வேண்டியதில்லை. யூனியன் பொதுநிதியில் செய்வோம்.

வேலு: அனைவருமே நிதி கொடுத்து விடுவோம். இவ்வாறு நடந்த விவாதத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, இந்திரா, உலகம்மாள், ஊர்நல அலுவலர் வள்ளியம்மாள், ஒன்றிய பொருளாளர் பிரவின் பெனட், மார்கோனி, திருமலைக்குமார், விஜயலெட்சுமி, கணக்கர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் உட்பட யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 20 ஆண்டுகளாக சரிசெய்யப்படாத ராமநதி அணைக்கு செல்லும் ரோட்டை சரி செய்யவேண்டுமென கவுன்சிலர் பாண்டியன், காவூர் முதல் தெற்கு மடத்தூர் வரையுள்ள ரோட்டை சரிசெய்ய கவுன்சிலர் கதிரேசன், கீழக்கடையம் ரயில்வே பீடர் ரோட்டை சரி செய்ய வேண்டுமென கவுன்சிலர் பால்ராஜூம் கோரிக்கை விடுத்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:46
 

பெருவழிக்கடவு பாலம், சாலைகளுக்கு ரூ. 1.19 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 29.03.2010

பெருவழிக்கடவு பாலம், சாலைகளுக்கு ரூ. 1.19 கோடி ஒதுக்கீடு

குலசேகரம், மார்ச் 28: திருவட்டார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருவழிக்கடவு உள்ளிட்ட பல்வேறு சாலைகளைச் சீரமைக்க ரூ. 1.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, திருவட்டார் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர். லீமாரோஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவட்டார் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாகக் காணப்பட்டன. அவற்றைச் சீரமைக்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் குலசேகரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் முதற்கட்டமாக ஆலுவிளை-சிதறால் சாலை, அருமனை-ஆற்றூர் சாலை, சுருளகோடு-தெரிசனம்கோப்பு சாலை, அருமனை-பனச்சமூடு சாலை, தேனாம்பாறை-கைதகம் சாலை, ஆற்றூர்-மூவாற்றுமுகம் சாலை, மேக்காமண்டபம்-வெள்ளியோடு சாலை, ரவிபுதூர் கடை-கல்லுப்பாலம் சாலை ஆகியவை ரூ. 1.67 கோடி மதிப்பில் செப்பனிடப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக பொன்மனை அருகேயுள்ள பெருவழிக்கடவு பகுதியில் பாலம் கட்ட ரூ. 10 லட்சமும், மேக்கோடு-குலசேகரம் சாலையில் வடிகால் கட்ட ரூ. 90 லட்சமும், கல்லடிமாமூடு-அண்டூர் சாலை செப்பனிட ரூ. 9 லட்சமும், பொன்மனை-பொன்னுமங்கலம் சாலையைச் செப்பனிட ரூ. 10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் முடிக்கப்பட்டுள்ளது. இச் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் அவர்.

Last Updated on Monday, 29 March 2010 10:37
 

சாலை அமைக்கும் பணி நிறுத்திவைப்பு : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் சிக்கல்

Print PDF

தினமலர் 27.03.2010

சாலை அமைக்கும் பணி நிறுத்திவைப்பு : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் சிக்கல்

கோத்தகிரி:கோத்தகிரி மார்க்கெட் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் சிக்கல் நிலவுவதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலேயே சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது கோத்தகிரி பேரூராட்சி; 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாகன நெரிசலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. கோத்தகிரி மார்க்கெட் பகுதிக்கு வாகனங்களில் வருபவர்கள், சாலையோரத்தில் நிறுத்துவதால், நெரிசல் அதிகரிக்கிறது. இதைக் கருதி, கோத்தகிரி மார்க்கெட் சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்து, அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 10 லட்சம் நிதி ஒதுக்கியது.

நிதி மூலம், இப்பகுதியில் இரு தெருவிளக்குகள், சாலையோர நடைபாதை, மழைநீர் பாதாள வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதன்படி, மார்க்கெட் சாலையை சமன்படுத்த ஜேசிபி., மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது.

மழைநீர் வடிகால்வாயின் மேல் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகற்றவில்லை. இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, அதன் உரிமையாளர்களிடம் பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது; தவிர, பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. கடைகளை அகற்ற உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளாததால், பேரூராட்சியில் அவசரக் கூட்டம் நடந்தது. 'கடை உரிமையாளர்கள், தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்ற வேண்டும்; மழைநீர் வடிகால்வாய் அமைத்தவுடன்,பேரூராட்சி நிர்வாகம் மூலம், தரமான கடை அமைத்து தரப்படும்; அதுவரை, மார்க்கெட் ஜீப் திடலில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், கடைகளை அகற்ற எடுத்து வரும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, கடை உரிமையாளர், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மார்க்கெட் சாலை சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், மழைநீர் பாதாள வடிகால்வாய் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நாட்களில், மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு, தாழ்வாக உள்ள மார்க்கெட் சாலையில் குவிய வாய்ப்புள்ளது; இதன் மூலம், சுகாதார சீர்கேடு ஏற்படும் என தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Last Updated on Saturday, 27 March 2010 10:08
 


Page 133 of 167