Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஆரணி மார்க்கெட் ரோட்டில் வருது ரூ. 1.65 கோடியில் சிமென்ட் சாலை

Print PDF

தினமலர் 26.02.2010

ஆரணி மார்க்கெட் ரோட்டில் வருது ரூ. 1.65 கோடியில் சிமென்ட் சாலை

ஆரணி: ஆரணி மார்க்கெட் ரோட்டில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்க கால்வாய்கள் கட்டி சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆரணி நகரின் பிரதான சாலையான மார்க்கெட் ரோட்டில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்து வியாபாரிகள், அதிகாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் ஆரணி நகர்மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, எம்.எல்.. சிவானந்தம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். கமிஷனர் சசிகலா வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை, தொலைபேசி, டிராபிக் போலீஸ் மற்றும் சேவை சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எம்.எல்.. சிவானந்தம் பேசியதாவது: ஆரணி நகரின் முக்கிய வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள மார்க்கெட் ரோட்டில் அதாவது, பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து மண்டிவீதி, காந்திசிலை வரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோட்டின் இருபுறமும் பக்க கால்வாய்கள் அமைத்து சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், மண்டி வீதி, காந்தி சிலையில் இருந்து எஸ்.எம்.ரோடு பிள்ளையார் கோயில் வரை எம்.எல்.. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி 2 மாதங்களில் முடிவடையும். எனவே, வியாபாரிகள் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகள் நடக்க ஒத்துழைப்பு தரவேண்டும். இல்லையெனில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும், மண்டி வீதி காந்தி சிலை அருகில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், கல்வெர்ட்டுகள் அகற்றப்படும். சைக்கிள், டூவீலர் "பார்க்கிங்' செய்ய தனியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated on Friday, 26 February 2010 06:22
 

ரோடு அமைத்தால் ஐந்தாண்டுகள் தோண்டக்கூடாது மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 25.02.2010

ரோடு அமைத்தால் ஐந்தாண்டுகள் தோண்டக்கூடாது மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை:""மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் ரோடு அமைக்கப் பட்டால், ஐந்தாண்டுகளுக்கு ரோட்டைத் தோண்டக்கூடாது. ரோட்டின் ஓரத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தொட்டியின் மூலம் வயரிங் பணிகளைச் செய்யலாம்,'' என, மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது : மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட், ராணி மங்கம்மாள் சத்திரம், மேலவெளி வீதி, கான்சா மேட்டுத் தெரு, தமிழ்ச்சங்கம் ரோடு பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக பூட்டிக் கிடந்த 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இதில் 40 கடைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. இதன் மூலம் 50 லட்ச ரூபாய் டெபாசிட் தொகையும், மாதம் இரண்டு லட்ச ரூபாய் மாத வாடகையும் கிடைக்கும். இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு சொத்துவரி விதிக்கப் பட்டு வந்தது. ருகிறது. வரி செலுத் தாத 10 ஆயிரம் வீடுகள் கண்டுபிடிக் கப்பட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுதவிர 10ஆயிரம் வீடுகள் வரை வரிசெலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மொபைல் போன் டவருக்கு புதிதாக வரிநியமனம் செய்து குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் வரிவசூல் செய்ய முடிவு செய்யப் பட்டது. மொத்தம் 240 கோடி ரூபாயில் நடைபெறும் 11 கால்வாய் பணிகளில், 40 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. டிசம்பர் 2011க்குள் பணிகள் முடிந்துவிடும். மதுரை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ரோடுகள், மாநகராட்சிக்கு சொந்தமான ரோடுகள் சர்வதேச தரத்துடன் உயர்த்துவதற்காக ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. இன்னும் ஆறுமாதத்தில் சர்வே முடிந்தவுடன், டெண்டர் கோரப் பட்டு பணிகள் துவங்கும். ரோடு அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் வரை, ரோடு தோண்டக்கூடாது. ரோட்டின் ஓரத்தில் சிமென்ட் பெட்டி அமைக்கப்பட்டு, வயரிங் பணிகள் அதன் மூலம் இணைக்கப்படும். ரோடு தோண்ட வேண்டியதில்லை. கொசுவை ஒழிக்க வீரிய மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. புதிதாக ஆறு வாகனங்கள் வாங்கப் பட்டுள்ளன. நீர்தேங்கியுள்ள பகுதிகளில் எண்ணெய் உருண்டைகள் கொட்டப்பட்டு, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறோம்.சென்ட்ரல் மார்க்கெட்டில், தற்போதுள்ள கடைக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டது போக, மீதியுள்ள கடைகளுக்கு ஏப்ரல் முதல்வாரத்தில் ஏலம் நடத்தப்படும்.மீனாட்சி கோயில் நிர்வாகம், மாநகராட்சி இணைந்து 46 லட்ச ரூபாய் செலவில், பொற்றாமரை குளத்தில் நிரந்தரமாக நீர்தேக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தினமும் ஒருலட்சம் கனஅடி தண்ணீர் தேவை படுகிறது. மணலூரிலிருந்து, மீனாட்சி கோயில் அருகிலுள்ள ஜோசப் பூங்காவில் காலியாக தண்ணீர்த்தொட்டியிலிருந்து நிரப்பப் படும். அங்கிருந்து குழாய் மூலம் பொற்றாமரை குளம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) பாஸ்கரன் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 25 February 2010 06:42
 

ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை

Print PDF

தினமணி 22.02.2010

ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை

பெரம்பலூர், பிப். 21: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா தெரிவித்தார். நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும், ரூ. 23.38 கோடியில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் 6-வது வார்டு பகுதியில் ரூ. 23 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா கூறியது:

நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்தத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதியின் மூலம் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக 6-வது வார்டில் ரூ. 23 லட்சத்திலும், 7, 14-வது வார்டுகளில் ரூ. 24 லட்சத்திலும், 8-வது வார்டில் ரூ. 14.5 லட்சத்திலும், 11-வது வார்டில் ரூ. 30 லட்சத்திலும், 15-வது வார்டில் ரூ. 16 லட்சத்திலும் என 21 வார்டுகளிலும் ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 9 வார்டில் தார்ச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, 12, 13 ஆகிய வார்டுகளில் பணிகள் தொடங்கும் என்றார் ராஜா. இந்த ஆய்வின் போது நகராட்சி வருவாய் உதவியாளர்கள் டி. அப்லோசன், எம். மகேஸ்வரன், இளநிலை உதவியாளர் கே. குமரன், பணி மேற்பார்வையாளர் எஸ். குமார். ஒப்பந்ததாரர் எஸ்.பி.டி. செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 22 February 2010 09:35
 


Page 138 of 167