Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தேனி நகராட்சி புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி               02.09.2013

தேனி நகராட்சி புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

தேனி நகராட்சி புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு சாலையை சீரமைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சனிக்கிழமை தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.

 தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. புதிய பஸ் நிலைய அணுகு சாலையான தேனி-பெரியகுளம் புற வழிச்சாலை, பஸ் நிலையத்தின் தரை மட்டத்தைவிட 9 மீட்டர் உயரமாக உள்ளது. மேட்டுப்பாங்கான சாலையில் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதியில் சாலையின் மேட்டை குறைக்கவும், அகலப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

 இந்தப் பணிக்கு அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை சீரமைப்புப் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பஸ் நிலைய அணுகு சாலையான தேனி-பெரியகுளம்  புறவழிச் சாலையை சீரமைப்பதற்கு முறையாக அனுமதி பெறாததால், சீரமைப்பு பணிகளை தொடங்குவதற்கு வனத் துறை தடை விதித்தது. அணுகு சாலை சீரமைப்புக்கு வனத் துறையிடமிருந்து அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 இந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோரின் தலையீட்டால், புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புக்கு கடந்த ஆக.26ஆம் தேதி வனத்துறை அனுமதி வழங்கியது.

     இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்பு பணி சனிக்கிழமை தொடங்கியது. சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் தேனி-பெரியகுளம் புற வழிச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 சாலையின் மேட்டை குறைப்பதற்கு மண்ணை அப்புறப்படுத்தும் பணி 10 நாட்களில் முடிவடையும் என்றும், தொடர்ந்து சாலை சீரமைப்பு பணி துரிதமாக நடைபெறும் என்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

 

சிதம்பரத்தில் சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு

Print PDF

தினமணி            21.08.2013

சிதம்பரத்தில் சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு

சிதம்பரம் பஸ் நிலையம் அருகே சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன.

  •  சிதம்பரம் பஸ் நிலையம் பகுதியில் காந்திசிலை அருகே உள்ள சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தன.
  • இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
  • இது குறித்து ஆகஸ்ட் 17-ம் தேதியிட்ட "தினமணி' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.
  • இதையடுத்து உடனடியாக சிதம்பரம் பஸ் நிலையம், காந்திசிலை, காமராஜர் அரசு மருத்துவமனை, ரயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டன. மேலும் அங்கு தார்ச்சாலைகளும் போடப்பட்டன.
 

திருநீர்மலை லட்சுமிபுரத்தில் புதிய தார்சாலை அமைப்பு

Print PDF

தினகரன்            21.08.2013

திருநீர்மலை லட்சுமிபுரத்தில் புதிய தார்சாலை அமைப்பு

தாம்பரம்: திருநீர்மலை லட்சுமிபுரத்தில் பழைய சாலையை அகற்றி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருநீர்மலை பேரூராட்சி லட்சுமிபுரத்தில் சேதமடைந்த சந்திரன் நகர் - சிஎல்சி லைன் சாலையை பேரூராட்சி பொது  நிதி 8 லட்சத்தில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. புதிதாக தார் சாலை அமைப்பதற்கு முன் சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்ததை பொருட்படுத்தாமலும், பழைய சாலையை அகற்றாமலும் ஜல்லி கற்கள் கலந்த தார் காலவையை வேகவேகமாக கொட்டி பரப்பினர். தார் கலவை சாலையில் ஒட்டாமல், பெயர்ந்து கொண்டே இருந் தது. இதையும் பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் தார்சாலை அமைத்து விட்டு சென்றனர்.

முறையாக போடப்படாததால் சாலையில் அப்பகுதி மக்கள் நடந்து செல்லும்போது, கால்களில் தார்கலவை ஒட்டிக்கொள்கிறது. இதனால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். சில இடங்களில் தார்சாலை போட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. சாலை பணிகள் முழுமையானதாக, உரிய தரத்துடன் நடக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுபற்றி தினகரன் நாளிதழில் கடந்த 18ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்ட னர். இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். பின்னர், நேற்று முதல் அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 


Page 21 of 167