Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.4,300 கோடியில் பெங்களூரைச் சுற்றி வெளி வட்டச் சாலை

Print PDF

தினமணி              24.07.2013

ரூ.4,300 கோடியில் பெங்களூரைச் சுற்றி வெளி வட்டச் சாலை

பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் மூலம், பெங்களூரைச் சுற்றி ரூ. 4,300 கோடியில் வெளி வட்டச் சாலை அமைக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூர் சட்டபேரவையில் செவ்வாய்க்கிழமை பாஜக உறுப்பினர் எஸ்.ஆர்.விஸ்வநாத்தின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:

பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் மூலம், பெங்களூரில் உள்ள தும்கூர் சாலையிலிருந்து ஓசூர் சாலை வரை ரூ.4,300 கோடியில், 65 கி.மீ. சுற்றளவு கொண்ட வெளி வட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் மூலம், தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகு,

வெளி வட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.

2005-ஆம் ஆண்டு, வெளி வட்டச் சாலை அமைக்க நிலங்களைக் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2011-ஆம் ஆண்டு, அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதற்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில், சாலை அமைப்பதற்காக நீதிமன்றம் அளித்த ரத்து ஆணை ஜூலை 15-ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து வெளி வட்டச் சாலை அமைக்க தேவைப்படும் 1,810 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் மூலம்,  வீட்டு மனைகள் அல்லது பணம் வழங்கப்படும். இந்த வெளி வட்டச் சாலை, தும்கூர் சாலை, தொட்டபள்ளாபூர் சாலை, பழைய மதராஸ் சாலை, சர்ஜாபுரா சாலை வழியாக ஓசூர் சாலை வரை அமைக்கப்படும் என்றார் சித்தராமையா.

 

தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீள சாலைகளை சீரமைக்க ரூ.152.37 கோடிக்கு ஒப்புதல்

Print PDF

தினமணி               04.07.2013

தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீள சாலைகளை சீரமைக்க ரூ.152.37 கோடிக்கு ஒப்புதல்

தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீளச் சாலைகளை சீரமைக்க ரூ.152.37 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிராமங்களையும், நகரங்களையும் இணைப்பது, பயண நேரம், வாகன இயக்கச் செலவு ஆகியவற்றைக் குறைப்பது போன்ற நோக்கங்களுடன் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பை ஏற்படுத்தி, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருச்சி மாவட்டம் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில், திருச்சி நகரத்துக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இணைப்பாக 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனப் போக்குவரத்து அந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், திருச்சி-ஸ்ரீரங்கம் இருவழிப் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நகரின் ஏனைய பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பழுதடைந்துள்ள இரும்புப் பாலத்தை மாற்றியமைத்து புதியதாக நான்கு வழி பாலம், அணுகுசாலையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறுபாலம் மற்றும் சாலை சந்திப்பில் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை ரூ.81 கோடி செலவில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு: கோடைவாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு கொடைக்கானலில் 17 கிலோமீட்டர் நீள சாலைத் தொடர்களை இடைவழித் தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்துதல், சிறு பாலங்கள் கட்டுதல், சாலையை ஒட்டி தாங்கும் சுவர் கட்டுதல் போன்ற பணிகளை ரூ.18.25 கோடி செலவில் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணம் நகரை எளிதில் அடைய வசதியாக விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே பாலக்கரையில் அமைந்துள்ள பாலம் பழுதடைந்துள்ளதால் அந்தப் பாலத்தில் இப்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு பாலம் வழியாக சுற்றி விடப்படுகிறது. இதனால் காலவிரயம் மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது. எனவே, அந்தப் பாலத்தினை ரூ.5 கோடி செலவில் புதுப்பித்து மீண்டும் கட்டப்படும்.

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களைக் தவிர்க்கும் வகையில் சேலம் நகரிலுள்ள ஐந்து ரோடு சாலை சந்திப்பு மற்றும் குரங்குச் சாவடி சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தச் சாலை மேம்பாலங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள 42 கிலோமீட்டர் சாலைகளை ரூ.86.45 கோடியிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 36.80 கிலோமீட்டர் சாலைகளை ரூ.65.92 கோடியிலும் சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.

மொத்தத்தில், தமிழகத்தில் ரூ.152.37 கோடி செலவில் 78.80 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சாலைகளை புதிப்பிக்க ரூ.410 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

Print PDF

தினபூமி                  04.07.2013

சாலைகளை புதிப்பிக்க ரூ.410 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Jaya1(C)_100.jpg

சென்னை, ஜூலை.4 - திருச்சி - ஸ்ரீரங்கம் பாலத்தை புதுப்பித்து 4 வழியாக மாற்றியமைக்கவும், அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட சாலைகளை புதுப்பிப்பது உட்பட பல்வேறு சாலை பணிகளுக்காக ரூ.410.7 கோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி  உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாலைகள் அனைத்து மக்களையும் இணைத்து தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது. மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணைபுரிகின்றன.

கிராமங்களையும் நகரங்களையும்  இணைப்பது, பயண நேரம், வாகன இயக்கச் செலவு ஆகியவற்றை குறைப்பது போன்ற நோக்கங்களுடன், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பினை ஏற்படுத்தி,  தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில்,  முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 

 அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலையில், திருச்சி மாநகரத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும்  இணைப்பாக 1927-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனப் போக்குவரத்து இப்பாலத்தில் தற்பொழுது அனுமதிக்கப்படுவது இல்லை.  இதன் காரணமாக திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் சென்றடைவதிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி சென்றடைவதிலும் காலதாமதம் ஏற்படுகின்றது.  இதன் தெடர்ச்சியாக,  ஏனைய பகுதிகளில் வாகன நெரிசல் அதிக அளவு ஏற்படுகிறது.   

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பழுந்தடைந்துள்ள இரும்புப் பாலத்தினை மாற்றியமைத்து புதியதாக நான்கு வழி பாலம்,  அணுகு சாலையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறு பாலம் மற்றும் சாலை சந்திப்பில் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை 81 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வாக அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளார்.

கோடைவாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கொடைக்கானலில் 17 கி.மீ நீள சாலைத் தொடர்களை இடைவழித் தடத்திலிருந்து  இருவழித்தடமாக அகலப்படுத்துதல், சிறு பாலங்கள் கட்டுதல், சாலையை ஒட்டி தாங்கும் சுவர் கட்டுதல் போன்ற பணிகளை 18 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா   நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.  

கும்பகோணம் நகரை எளிதில் அடைவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ள விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், காவேரி ஆற்றின் குறுக்கே  பாலக்கரையில் அமைந்துள்ள பாலம் பழுதடைந்துள்ளதால், இப்பாலத்தில் தற்பொழுது போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு பாலம் வழியாக சுற்றி விடப்படுகிறது. இதனால் காலவிரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.  எனவே இந்த பாலத்தினை 

5 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து மீண்டும் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை முதலமைச்சர்  ஜெயலலிதா வழங்கி  உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் வகையில்  சேலம் நகரிலுள்ள ஐந்து ரோடு சாலை சந்திப்பு மற்றும் குரங்குச் சாவடி சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா, இச்சாலை மேம்பாலங்கள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு 1 கோடியே 

8 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் சுண்ணாம்பு சுரங்கம் மற்றும் சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களாகும்.  இத்தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால்,  இங்குள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.   எனவே பழுதடைந்த சாலைகள் அனைத்தும் கனரக வாகனங்கள் செல்லும் வகையில்  புதுப்பிக்கப்பட வேண்டும் என  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள  பழுதடைந்துள்ள 42 கி.மீ நீளமுள்ள சாலைகளை  86 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள 36.80 கி.மீ சாலைகளை 65 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவிலும்  சீரமைத்திட, அதாவது மொத்தம்  152 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் 78.80 கி.மீ நீளமுள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி  உத்தரவிட்டுள்ளார்.     

அரசின் இந்த நடவடிக்கைகள், வாகன நெரிசல் இன்றி குறைந்த நேரத்தில், பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இடத்தைச் சென்றடைய வழிவகுக்கும்.

Last Updated on Thursday, 04 July 2013 07:35
 


Page 23 of 167