Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் நவீன தார்ச் சாலைகள்

Print PDF

தினமணி               18.06.2013

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் நவீன தார்ச் சாலைகள்

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.16 கோடியில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைக்கும் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி. உடன், மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர்.
திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.16 கோடியில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைக்கும் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி. உடன், மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர்.

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் நவீன தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

 சென்னை மாநகராட்சி 6-வது கோட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் ரூ.10 கோடியில் நவீன தார்ச்சாலை அமைக்கும் பணிகளும், இதர கோட்டங்களில் சுமார் ரூ.6 கோடி மதிப்பீட்டிலான பணிகளும் என 32 தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பணியாணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.    இப்பணிகளுக்கான தொடக்க விழா திங்கள்கிழமை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடைபெற்றது.

சென்னை மாநகர மேயர் சைதை எஸ்.துரைசாமி தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மாவதரம் வி.மூர்த்தி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் மேயர் துரைசாமி பேசியது: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவொற்றியூர் நகரம் கடந்த 18 மாதங்களில் ஏற்கெனவே இருந்ததைவிட பன்மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 400 சாலைகளையும் நவீன தார்ச்சாலைகளாகவும், கான்கிரீட் சாலைகளாகவும் மாற்றும் பணி தொடங்கப்பட்டு, படிப்படியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ரூ.16 கோடியிலான சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்தவுடன் உட்புறச் சாலைகளில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு, பின்னர் நெடுஞ்சாலையில் செல்லும் பிரதான கால்வாயுடன் இணைக்கப்படும். 

ரூ.15 கோடியில் தெருவிளக்குகள்: திருவொற்றியூர் மண்டலத்தில் நவீன தெருவிளக்குகள் அமைக்க ரூ.15 கோடியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு மழைநீரை அதில் நிரப்பும் வகையில் பணிகள் நடைபெற்றுள்ளன. ஏற்கெனவே இருந்த பூங்காக்கள் சீர்செய்யப்பட்டு, மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு புதுப் பொலிவு பெற்றுள்ளன.

கடலோரப் பகுதியான திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் நவீன மீன் அங்காடி விரைவில் அமைக்கப்பட உள்ளது. புதிய திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும்போது திருவொற்றியூர் நகரம் ஆச்சரியப்படத்தக்க வகையில் வளர்ச்சியைப் பெறும் என்றார் துரைசாமி.

நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், துணை மேயர் பெஞ்சமின், மண்டலக் குழுத் தலைவர் தன.ரமேஷ், உதவி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் வின்சென்ட் அமுல்ராஜ், தன்ராஜ், சரவணன், கலையரசன், எழிலரசி, பிரபாகரன், அ.தி.மு.க நகரப் பொருளாளர் அம்பிகைதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சாலைகளைச் சரிசெய்ய ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி               14.06.2013

சாலைகளைச் சரிசெய்ய ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகளைச் சரி செய்யும் பணிக்கு ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  கோவை, பழைய மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளனன. இப்பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டதால் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. சாலைகளைச் சரி செய்வதற்காக ரூ. 50 கோடி கேட்டு மாநகராட்சியில் இருந்து அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  இதில் முதல் கட்டமாக ரூ. 35 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஐயுடிஎம் திட்டத்தின் கீழ் கோவை மாநராட்சிக்கு ரூ. 15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  பாதாளச் சாக்கடைக்குத் தோண்டிய இடங்களில் சாலைகளைச் சரி செய்வதற்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகளைச் சரி செய்யும் பணி துவங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ரயில்வே மேம்பாலங்களில் ரூ.38 லட்சத்தில் மின் விளக்குகள்

Print PDF
தினமணி       05.06.2013

ரயில்வே மேம்பாலங்களில் ரூ.38 லட்சத்தில் மின் விளக்குகள்


நாமக்கல் நகராட்சிப் பகுதியிலுள்ள மூன்று ரயில்வே  மேம்பாலங்களில் ரூ.38 லட்சத்தில் மின் விளக்குகள் அமைத்திட நகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நாமக்கல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு  நிதி, மற்றும் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 சேலம் - கரூர் அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் நிறைவுபெற்று கடந்த வாரம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதையில் சேலம் - கரூர் இடையே 47 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் நாமக்கல் நகராட்சி எல்லைக்குள் மூன்று மேம்பாலங்கள் அமைந்துள்ளன.  அனைத்து மேம்பாலங்கள் மீதும் இதுவரை மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால், இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மீது பொதுமக்கள் மிகுந்த பீதியுடன்தான் சென்று வந்தனர். இதைத் தவிர்க்க, மேம்பாலங்கள் மீது மின் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

 இதையடுத்து, நாமக்கல் நகராட்சி தனது எல்லைக்குள் வரும் மூன்று மேம்பாலங்கள் மீது மீது மின் விளக்குகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு  ரூ.38 லட்சம் செலவு ஆகும் என்று மதிப்பீடப்பட்டுள்ளது. இதில் ஒரு மேம்பாலத்தின் மீது மின் விளக்குள் அமைத்திட நாமக்கல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான கருத்துருக்கள் மக்களவை உறுப்பினர் செ.காந்திசெல்வனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 மற்ற இரு ரயில்வே மேம்பாலங்கள் மீது தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியுடன், நகராட்சி பொது நிதி மற்றும் அரசு நிதியையும் பயன்படுத்தி மின் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன் தெரிவித்தார்.
 


Page 25 of 167