Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கிளாம்பாடியில் ரூ. 17 லட்சத்தில் தார்ச் சாலை அமைப்பு

Print PDF
தின மணி          23.02.2013

கிளாம்பாடியில் ரூ. 17 லட்சத்தில் தார்ச் சாலை அமைப்பு

ஊஞ்சலூர் அருகே கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ. 17 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிளாம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கருமாண்டாம்பாளையம் பஸ் நிறுத்தம் முதல் ஈஞ்சம்பள்ளி செல்லும் சாலையைப் புதுப்பிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக நபார்டு வங்கி மூலம் ரூ. 17 லட்சம் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பேரூராட்சித் தலைவர் சி.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.

Last Updated on Monday, 25 February 2013 11:59
 

கோபி பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்

Print PDF
தின மணி          23.02.2013

கோபி பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்


கோபி அருகிலுள்ள கங்கம்பாளையம்- கோபி- ஈரோடு மெயின்ரோடு இணைப்புச் சாலையை ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கும் பணியை கோபி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

கோபி அருகிலுள்ள நஞ்சவுண்டம்பாளையம்- கள்ளிப்பட்டி வரையிலான 2.5 கி.மீ. நீளமுள்ள இணைப்புச் சாலை மிகவும் பழுதடைந்திருந்தது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் இந்த இணைப்புச் சாலை அமைக்கும் பணியை கோபி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பழுதடைந்த சாலை காரணமாக சரியாக போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. அது புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து சீராகும். இந்த 3 கி.மீ. நீளமுள்ள இணைப்புச் சாலையில் 10 சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் அடங்கும்.

கோபி மேற்கு ஆர்ச் முதல் காசிபாளையம் வரை சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை விஸ்தரிப்புப் பணிகளையும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

மொடச்சூரிலிருந்து கெட்டிச் செவியூர் வரையில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் சாலை விஸ்தரிப்புப் பணிகளையும் அவர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கோபி கோட்டாட்சியர் பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சின்னசாமி, கோபி நகராட்சித் தலைவர் ரேவதிதேவி, கோபி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியபாமா வாசு, வழக்குரைஞர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 25 February 2013 11:56
 

போக்குவரத்து அபிவிருத்திக்காக கட்டாய நில ஆர்ஜிதம்

Print PDF
தின மணி          23.02.2013

போக்குவரத்து அபிவிருத்திக்காக கட்டாய நில ஆர்ஜிதம்

கோவை கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 37-வது வார்டு  பகுதியில் போக்குவரத்து அபிவிருத்திக்காக சுமார் 36 சென்ட் நிலத்தை கட்டாய ஆர்ஜிதம் செய்ய மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வார்டில் தண்ணீர் பந்தல் சாலை, விளாங்குறிச்சி சாலை, கொடிசியா சாலை மற்றும் காந்தி மாநகர் சந்திப்பில் அபாய வளைவுப் பகுதியில் அமைந்துள்ள பழைய குடியிருப்புகளை (36 சென்ட் நிலம்), போக்குவரத்து அபிவிருத்திக்காக கட்டாய நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான இழப்பீட்டுத் தொகை விவரம் அரசு வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 பேரின் நிலங்களை உள்ளூர் திட்டக் குழுமத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து பெற்று அபிவிருத்தி செய்வது தொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாற்று இடம்: எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் நீண்ட காலமாக மழை நீர் செல்லும் பள்ளத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 3 பேருக்கு மாற்று ஏற்பாடாக அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் திருவள்ளுவர் நகர், சாமா நாயுடு வீதி சாலையை இணைக்கும் வகையில் தனியார் நிலம் சுமார் 4400 அடி ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.2 கோடியை உள்ளூர் திட்டக் குழும உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிதியில் இருந்து பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் விமான நிலையத்துக்குள் நுழையும் சாலையில் மாவட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு 21.50 சென்ட் பரப்பளவு, சி.எஸ்.ஐ. திருச்சபையின் அனுபவத்தில் உள்ளது. மேலும் 12.50 சென்ட் பரப்பளவு தனியாரிடம் உள்ளது.

தனியாரிடம் இருந்து நில ஆர்ஜிதம் செய்தும் புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய்த் துறையிடம் இருந்து நில உரிமை மாற்றம் பெற்றும் போக்குவரத்துத் தீவு அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் நீக்கம்: கோவை மாநகராட்சியின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சிவக்குமார் மீது பெறப்பட்ட புகார் கடிதத்தின் அடிப்படையில் அவரை நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது தவிர, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்தும், அவருடைய 65-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 15 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
Last Updated on Monday, 25 February 2013 11:52
 


Page 33 of 167