Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி, ஆங்கிலம் சிறப்பு பயிற்சி

Print PDF

தினமணி 12.05.2010

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி, ஆங்கிலம் சிறப்பு பயிற்சி

மதுரை, மே 11: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கணினி மற்றும் ஆங்கிலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை ஆணையர் எஸ்.செபாஸ்டின் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 11-ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள 200 ஏழை மாணவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வெள்ளையன் கல்வி மருத்துவம் சாரிட்டபிள் டிரஸ்ட், கிரேஸ் பீட்டர் சாரிட்டபிள் டிரஸ்ட் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் மகால் திருவள்ளுவர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதற்காக 36 கணினிகள், 5 கணினி ஆசிரியர்கள், 5 ஆங்கிலம் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் ஐந்து பிரிவுகளாக சிறப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மாணவர்கள் கோடைக்கால விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் மே 28-ம் தேதியோடு முடிகிறது. பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன், வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.