Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி பத்தாம் வகுப்புதேர்வில் மாநில முதலிடம்

Print PDF

தினகரன்              27.05.2010

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி பத்தாம் வகுப்புதேர்வில் மாநில முதலிடம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பள்ளியில் பயின்ற ஏழை குடும்பத்து மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். இவர் தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில்100, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நெல்லை மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சேக்தாவூது, ஜவுளிவியாபாரம் செய்துவருகிறார். தாய் நூர்ஜகான். இவரது அண்ணன் இம்ரான், நெல்லை பேட்டையில் உள்ள அரசு ஐ.டி..,யில் பயில்கிறார். தம்பி இர்வான் ஆறாம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கூடத்திற்கு எதிர்புறம் உள்ள காம்பவுண்ட் வீடு ஒன்றில் இவர்களது குடும்பம் வசிக்கிறது.

தமது படிப்பு குறித்து கூறுகையில், அன்றன்று வகுப்பில் நடத்தும் பாடங்களை இரவு ஒரு மணிவரையிலும் விழித்தாவது படித்துவிடுவேன். தேர்வு நேரங்களில் காலை 5 மணிக்கு மீண்டும் படிக்க ஆரம்பிப்பேன். நான் எப்போதுமே டிவி பார்ப்பதில்லை. மாநகராட்சி பள்ளி என்றாலும் ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துவார்கள். வகுப்பு தோழிகளும் நான் மாநில ரேங்க் வாங்குவேன் என அடிக்கடி கூறி உற்சாகப்படுத்தினார்கள். நானும் மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இதே பள்ளியில் பிளஸ் 2 பயில்வேன். பி..,இன்ஜினியரிங் முடித்துவி ட்டு ஐ..எஸ்.,படிக்க உள்ளதாக தெரிவித்தார். தற்போது 495 மதிப்பெண் பெற்றுள்ள ஜாஸ்மினுக்கு சமூகஅறிவியலில் இரண்டு மதிப்பெண் குறைந்துவிட்டது என்ற வருத்தம் உள்ளது.

நெல்லை மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் க.நடராஜன் கூறுகையில், மாநகராட்சி பள்ளி பல ஆண்டுகளாக செயல்படுகிறது.மிகவும் ஏழ்மையான மாணவிகளே இங்கு அதிகம் பயில்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளியில் மொத்தம் 2 ஆயிரத்து 800 மாணவிகள் பயின்றார்கள். ஆனால் பள்ளிக்கு அரசு வழங்கிய கட்டட வசதிகள், ஆசிரியர்களின் உழைப்பினால் தற்போது 3 ஆயிரத்து 450 மாணவிகள் பயில்கிறார்கள். பத்தாம் வகுப்பில் மட்டும் 522 பேர் எழுதினார்கள். 97 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். இந்த பள்ளி கடந்த 95ம் ஆண்டில் மாநில அளவில் 2வது, 3வது இடங்களை பிடித்தனர். கடந்த ஆண்டு மாவட்ட ரேங்க் பிடித்தனர். தற்போது மாநில முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி என்றார்.