Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளி மாணவர்களைப் பாதித்த புதர்ச்செடிகள் அகற்றம்

Print PDF

தினமணி 10.06.2010

பள்ளி மாணவர்களைப் பாதித்த புதர்ச்செடிகள் அகற்றம்

போடி, ஜூன் 9: போடியில் பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் இருந்த புதர்ச் செடிகளை நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போடி நகராட்சிக்கு பாத்தியப்பட்ட அண்ணா நினைவு நகராட்சி நடுநிலைப் பள்ளி பழைய பஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளிக் கட்டடத்தின் வடக்குப் பகுதியில் கழிவு நீரோடை செல்கிறது.

இந்நிலையில், கழிவுநீரோடையில் புதர்ச் செடிகள் வளர்ந்து பள்ளிக் கட்டடத்தை மறைத்தும், விஷ ஜந்துக்களாலும், கொசுக்களாலும் சுகாதாரக் கேடான நிலை நிலவிவந்தது. இதனால், கழிவு நீரோடை குறுகி கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு புதர்ச் செடிகள் மண்டிக் கிடந்தன.

இதுகுறித்து புதன்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார், புதர்ச் செடிகளை அகற்றி கழிவுநீரோடையைத் தூர்வார உத்தரவிட்டார்.

அதன்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, மெர்லி வர்கீஸ், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பள்ளிகட்டடத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புதர்ச் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் கழிவுநீரோடையைத் தூர்வாரும் பணியும் நடைபெற்றது.

சுகாதாரச் சீர்கேட்டைக் களைய உடனடி நடவடிக்கை எடுத்த போடி நகராட்சி ஆணையாளர் மற்றும் நிர்வாகத்துக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.