Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி: துணை வட்டாட்சியருக்குப் பாராட்டு

Print PDF

தினமணி 11.06.2010

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி: துணை வட்டாட்சியருக்குப் பாராட்டு

மதுரை, ஜூன் 10: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மற்றும் மாநில அளவில் முதலிடம் பெறுவதற்காகவும் சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி அளித்த துணை வட்டாட்சியரை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் பாராட்டினார்.

தமிழக அளவில் முதன் முறையாக மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தேர்ச்சி பெற இயலாத குறைந்த மதிப்பெண் பெற்ற ஏழை, எளிய மாணவ, மாணவியர் 82 பேரைத் தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு மாநகராட்சி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தங்கும் இடம், உணவுஉள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரையில் நடைபெற்றது. மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக எளிய முறையில் ஆசிரியரால் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இதனால் தேர்ச்சி பெற இயலாத நிலையில் இருந்த 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இச்சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த துணை வட்டாட்சியர் பாலாஜி, மாநகராட்சி தமிழ் ஆசிரியர் ஜஸ்டின் ஆகியோரை ஆணையர் பாராட்டினார்.

இதே போல் தொடர்ந்து இந்த கல்வி ஆண்டிலேயே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ, மாணவியரைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாநில அளவில் சிறப்பிடம் பெற வைக்க தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஆணையர் தெரிவித்தார்.