Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பசுபதீஸ்வரா பள்ளியில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்

Print PDF

தினகரன் 30.06.2010

பசுபதீஸ்வரா பள்ளியில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்

கரூர், ஜூன் 30: கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மணிராஜ், ஆண்டாள் பாலகுரு, சூர்யா கதிரவன், சுப்பன், சங்கர், ராஜகோபால், ராஜலிங்கம், நல்லமுத்து, விஜயலட்சுமி, முத்துசாமி, கமலா, வளர்மதி, பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து நகராட்சி தலைவர் வாசித்த தீர்மானத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் முத்துசாமி, கமலா, வளர்மதி, பரமசிவம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சிக்கு புதிதாக 75 கேவிஏ ஜெனரேட்டர் வாங்க ஒப்புதல் பெறப்பட்டது. இரட்டை வாய்க்காலில் தூர்வாரும்போது புதுத்தெருவில் இரும்பு கர்டர்கள் அகற்றப்பட்டது. புதிய இரும்பு கர்டர்கள் அமைக்க ரூ.50 ஆயிரம் கோரப்பட்டது.

பின்னர் உறுப்பினர் ஆண்டாள் பாலகுரு, வேறு நிதியில் இப்பணியை மேற்கொள்ளலாம். நகராட்சி ஆணையர் போன் அடித்தால் எடுப்பதில்லை. கூட்டத்திற்கும் அவர் வரவில்லை என்றார்.

நகராட்சி பொறியாளர் ராஜா: கரூர் நகராட்சிக்கான ரூ.25 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் தொடர்பாக இன்று சென்னையில் துணைமுதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதால் நகராட்சி ஆணையர் சென்றுள்ளார். நகராட்சி மூலம் கர்டர் அகற்றப்பட்டதால், இப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.என்றார். உறுப்பினர் சூர்யா கதிரவன்: கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக அங்கிருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டது. தற்போது 5 வயதிற்கு உட்பட்ட 40 குழந்தைகள் அங்குள்ளனர். அவர்களுக்கு உரிய கட்டடம் கட்டித்தராமல் அவதிபடுகின்றனர் என்றார். நகராட்சி தலைவர்: விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டிதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.