Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளையில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளி

Print PDF

தினமலர் 09.08.2010

பாளையில் பழுதடைந்த கட்டடத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளி

திருநெல்வேலி:பாளை., மனகாவலம் பிள்ளை மருத்துவமனை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வருவதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாளை., மனகாவலம் பிள்ளை மருத்துவமனை தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கான கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் பள்ளி சுவற்றில் உள்ள சன்சேடுகளின் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் தெரிவதோடு, ஒரு சில இடங்களில் விரிசல் காணப்படுகிறது. இங்கு மின்சாரம், குடிநீர் வசதிகள் இருந்தபோதிலும், பாத்ரூமிற்கு தண்ணீர் வசதியில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளியின் பின்பகுதியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது. மனகாவலம் பிள்ளை மருத்துவமனை தெரு மேடான பகுதியாக உள்ளதால் மழை காலங்களில் பள்ளிக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது. பள்ளி மாணவர்கள் சுகாதாரமற்ற சூழலில் கல்விகற்கும் சூழல் ஏற்படுகிறது. மாணவர்கள் விளையாடுவதற்காக பள்ளியின் பின் பகுதியில் மாநக ராட்சிநிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தை மாணவர்கள் மைதானமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர்கள் மற்றும் கற்கள் நிறைந்து காணப்படுகிறது. சேதமடைந்த பள்ளி கட்டடத்தை பழுதுபார்ப்பதோடு, மைதானத்தை காலதாமதமின்றி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கூறுகையில் இந்த பள்ளியில் பழுதடைந்த சன்சேடுகளை நீக்கி,புதிதாக கட்டவும், பாத்ரூமிற்கு தண்ணீர் வசதி மற்றும் காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கம்பிவேலி அமைக்கவும் பாளை மண்டல மாநகராட்சி உதவி கமிஷனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பேரில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்க மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என்றார்.