Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் 15 துவக்கப் பள்ளிகளில் விஜயதசமியன்று ஆங்கில வழி வகுப்புகள் தொடக்கம்: மேயர் மா.சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 17.08.2010

சென்னையில் 15 துவக்கப் பள்ளிகளில் விஜயதசமியன்று ஆங்கில வழி வகுப்புகள் தொடக்கம்: மேயர் மா.சுப்பிரமணியன்

சென்னை துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேச்சு

சென்னை, ஆக.16: இந்த ஆண்டில் விஜயதசமியன்று 15 சென்னை துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆசிரியர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:

சென்னையில் ஏற்கெனவே 25 துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

÷இப்பள்ளிகளில் கடந்த ஆண்டில் 750-ஆக இருந்த மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டில் 1,365-ஆக அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டில் புதியதாக 15 துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. ÷இந்த ஆண்டில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தொடக்கக் கல்வியில் கொடுத்த பயிற்சியால் தான் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சாதிக்க முடிகிறது.

இப்போது மண்டலம் ஒன்று முதல் 5 வரையிலான ஆசிரியர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி மண்டலம் 6 முதல் 10 வரையிலான துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படும். தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை போல, சென்னை பள்ளிகளிலும் நவீன வசதிகள் ஏற்படுத்தி ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படும். சென்னையில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளைப் போல, 10 ஆற்றல்சார் பள்ளிகளை இம்மாத இறுதிக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைக் கண்காணித்து மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது அவசியமாகும். விஜயதசமியின் போது 10 ஆயிரம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது. அதற்கு தகுந்தாற்போல துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒவ்வொரு ஆசிரியரும் 10 பேரை சேர்க்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும் என்றார். கூட்டத்தில்,

சென்னை துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம்:

தனியார் பள்ளிகளைப் போல மாணவர்களுக்கு அடையாள அட்டை, டை, பேட்ச் ஆகியவற்றை வழங்க வேண்டும்.இப்போது மாணவர்களால் ஷூ அணிந்தபடி வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியவில்லை. எனவே மேஜை, நாற்காலியை வழங்க வேண்டும். மேலும், துவக்கப் பள்ளி மாணவர்கள் இசைக் கல்வி பெற வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் அலுவலகப் பணிகளுக்குப் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு வருவதில்லை. எனவே, அவர்களுக்கு ரொட்டித் துண்டு, பழம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். ஆசிரியர்கள் தெரிவித்துள்ள பல்வேறு கருத்துகளை பரிசீலித்து, அடுத்தக் கல்வியாண்டில் நிதிநிலையில் சேர்த்து அமல்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

Last Updated on Wednesday, 18 August 2010 10:10