Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்: மேயர்

Print PDF

தினமலர் 26.08.2010

மாநகராட்சி பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்: மேயர்

சென்னை : சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணித ஆய்வகத்தை மேயர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில், கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேயர் சுப்ரமணியன் நேற்று திறந்து வைத்து கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, நிர்வாகம் புது வகையான முன்மாதிரி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 97 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 6, 7, மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் கணித ஆய்வகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் பள்ளியிலும், வடசென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 40 ஆயிரம் மாணவ, மாணவியரில் 1,500 பேர் பயன் பெறும் வகையில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கணித ஆய்வகத்தின் மூலம் கற்றல் திறன், ஈடுபாடு, ஆர்வம் ஏற்படும். இதனால், மாணவ, மாணவியர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 67 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு மாத காலத்திற்குள் நூலகங்கள் அமைக்கப்படும். அதற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கும் பணி தற்போது நடக்கிறது. இவ்வாறு மேயர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை கமிஷனர் (கல்வி) பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.