Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலும் 40 மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: மேயர்

Print PDF

தினமணி 29.09.2010

மேலும் 40 மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: மேயர்

சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டம். உடன் ஆணையர் ராஜேஷ் லக்கானி.

சென்னை, செப்.28: சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்திடும் வகையில் 40 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:

பொதுமக்கள் நலன் கருதி பல் மருத்துவமனை இல்லாத மண்டலம் 3-ல் இளங்கோ நகர்,

மண்டலம் 4-ல் செம்பியம், மண்டலம் 5-ல் டி.பி. சத்திரம், மண்டலம் 6-ல் புதுப்பேட்டை, மண்டலம் 7-ல் நுங்கம்பாக்கம், மண்டலம் 9-ல் கோட்டூர்புரம், மண்டலம் 10-ல் வேளச்சேரி ஆகிய 7 மண்டலங்களில் புதிதாக பல் மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளன.

இங்கு பணிபுரிவதற்காக 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 7 பல் மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 9 இடங்களில் 3.66 கோடியில் பாலங்கள், சுரங்கப் பாதைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக 3.92 கோடி செலவில் ஆர்க்காடு சாலையில் உள்ள கோடம்பாக்கம் மேம்பாலம் பழுதுபார்த்து, மேம்படுத்தும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வலையுடன் கூடிய கதகதப்பு மெத்தைகள் மேலும் 39 லட்சம் செலவில் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், 23 தொடக்கப் பள்ளிகள், 17 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பிக்கும் முறை தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கெனவே 28 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எளிய முறையில் தொழில் உரிமம் வழங்கும் நடைமுறையிலுள்ள பட்டியலில் மேலும் சில தொழில்களை சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

3.67 கோடி செலவில் மேத்தா நகர், ஆபிசர்ஸ் காலனி முதல் தெருவினை வெங்கடாசலம் தெருவுடன் இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1.50 கோடி ஒதுக்கியுள்ளார். மீதமுள்ள 1.87 கோடியினை சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மன்ற உறுப்பினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி:

மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடுவது போல, மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேயர் பதில்: தொற்று நோய் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக அணுகுவதால் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும். மாநகராட்சியின் 6 பகுப்பாய்வுக் கூடங்களில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்து, மன்றக் கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது.