Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்விக்குழு தலைவர், கமிஷனர் பேட்டி மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த நடவடிக்கை

Print PDF

தினகரன் 05.10.2010

கல்விக்குழு தலைவர், கமிஷனர் பேட்டி மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த நடவடிக்கை

கோவை, அக். 5: கோவை மாநகராட்சிபள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கல்விக்குழு தலைவர் மற்றும் கமிஷனர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா முன்னிலை வகித்தார். துணை கமிஷனர் பிரபாகரன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், ஷோபனா, மீனா லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணி குறித்தும் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர் ந்து கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியின் கீழ் மேல்நிலைப்பள்ளிகள்& 16, உயர்நிலைப்பள்ளிகள்& 10, நடுநிலைப் பள்ளிகள்&14, மாற்றுத்திறனாளி பள்ளி&1 என மொத்தம் 82 பள்ளி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இப்பள்ளிகளில் நவீன உணவருந்தும் கூடம், குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம், நவீன கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. 29 பள்ளிகளுக்கு மல்டி மீடியா கணினி வழங்கப்பட்டுள்ளன.

மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழிகாட்ட வாழ்க்கை வழிகாட்டி வகுப்பு நடத்தப்பட்டது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் 9,838 மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். 20 பள்ளிகளில் மாணவியர் பயன்பெற நாப்கின் வெண்டிங் இயந்திரம் மற்றும் இன்சினரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பள்ளி மாணவர்கள் 9628 பேருக்கு ஷூ மற்றும் காலுறை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை வாங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 783 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மாலை நேரப் படிப்பகம் செயல்படுகிறது. மாநகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் ஸ்மார்ட் ரூம் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 550 மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளியில் கல்வி மற்றும் அடிப்படை வசதி தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மேலும் பள்ளிகளின் கல்வி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், கமிஷனர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்தனர்.