Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எல்லா மாநகராட்சி பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை

Print PDF

தினகரன்                11.11.2010

எல்லா மாநகராட்சி பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி, நவ. 11: மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப பள்ளிகளையும், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும், எல்லா பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்றவும் மாநகராட்சி புதிய திட்டத்தை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்விக் குழு தலைவர் மஹிந்தர் நாக்பால் கூறியதாவது:

கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் சிறப்பாக அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டும் அனைத்து ஆரம்ப பள்ளிகளையும் தரம் உயர்த்தி நடுநிலை பள்ளிகளாக ஆக்குவது, எல்லா பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்றுவது ஆகியவை குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவது, ஆரம்ப பள்ளியில் இருந்து நடுநிலை பள்ளி வரையில் கல்வி கற்பதை நீட்டிக்கச் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்வது, இரட்டை ஷிப்ட் திட்டத்தை மாற்றுவது, இருபாலர் கல்வி நிலை, எல்லா பள்ளிகளுக்கும் ஒரே நேரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் திட்டத்தின்படி, புதிதாக 40 பள்ளி கட்டிடங்களை கட்டுவது, குடிநீர் வசதி அளிப்பது, நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், சிறந்த பர்னிச்சர்கள் ஆகிய வசதிகளும் செய்து தரப்படும். இத்திட்டத்தை நிறைவேற்ற கூடுதலாக ரூ1,600 கோடி நிதி வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளில் கைரேகை பதிவு வருகைப்பதிவு இயந்திரத்தை அமல்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய முடியும். இதனால் புதிய திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளில் இந்த கருவிகள் பொருத்தப்படும். இதேபோல், ஆண்டுதோறும் மாணவர்களின் பதிவேடு பராமரிக்கப்படும். மாநில அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

டெல்லி துணைநிலை சேவைகள் தேர்வு குழுவிடம், புதிதாக 10,000 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டு ள்ளோம். இதில் ஆரம்ப மற்றும் நர்சரி பள்ளி ஆசிரியர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் ஆகியோரும் அடங்குவர். இவ்வாறு மஹிந்தர் நாக்பால் கூறினார்.