Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளியில் போட்டோகிராபி வகுப்புகள் தொடரும்

Print PDF

தினமலர்           02.12.2010

மாநகராட்சி பள்ளியில் போட்டோகிராபி வகுப்புகள் தொடரும்

சென்னை : சென்னை சூளைமேடு மாநகராட்சி பள்ளியில் போட்டோகிராபி பாடப்பிரிவு தொடர்ந்து நடத்தப்படும் என்றும், அங்கு பயிலும் மாணவர்கள் பயிற்சி பெற வசதியாக கேமரா, கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், 25 வகையான பாடப்பிரிவுகளில், தொழிற்கல்வி பயிற்சி கொடுக்கப்படுகிறது. தமிழகத்திலேயே சென்னை சூளைமேடு பள்ளியில் மட்டும் தான் போட்டோகிராபி பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது. கடந்த 1978ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த போட்டோகிராபி பாடப்பிரிவில், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இரு ஆண்டுகள் போட்டோகிராபி பயிற்சிக்கு பின், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் போட்டோகிராபி படித்தவர்கள் தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் "டிவி' பெரிய ஸ்டுடியோக்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

சிலர் ஸ்டுடியோக்கள் வைத்தும், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளை படம் எடுத்தும் வருவாய் ஈட்டுகின்றனர். மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் போட்டோகிராபி பயிற்சி முடித்ததும், வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால், இந்த பாடப்பிரிவை தமிழக அரசு திடீரென ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 25 தொழில் பாடப்பிரிவுகளில் 13 தொழில் பாடப்பிரிவுகளை ரத்து செய்து, தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. மாணவர் சேர்க்கை குறைவு; வீண் செலவு; ஆசிரியர் பற்றாக்குறை என ரத்து செய்ததற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. இதனால், சூளைமேடு பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில், போட்டோகிராபி பாடப்பிரிவு பயிற்சிக்கு, மாணவர்களின் சேர்க்கை நடக்கவில்லை. கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில், பயிற்சி பெற்ற 14 மாணவர்கள் மட்டும் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில், பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பிரிவை தொடர்ந்து நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் மேயர் சுப்ரமணியனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மேயர் சுப்ரமணியன் துணை கமிஷனர் (கல்வி) பாலாஜி ஆகியோர், நேற்று, சூளைமேடு பள்ளிக்கு சென்றனர். போட்டோகிராபி பாடப்பிரிவு ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிற்சி பெறும் 14 மாணவர்களையும் மேயர் சந்தித்து பேசினார்.

மேயரிடம் மாணவர்கள் கூறும் போது, "மாணவர்கள் சிறிய முதலீட்டில் தொழில் செய்ய வசதியாக உள்ள போட்டோகிராபி வகுப்பினை தொடர்ந்து நடத்த வேண்டும். தற்போது கேமரா வசதியில்லாமல், மாணவர்கள் சார்பில், வாடகைக்கு ஒரு கேமராவை எடுத்து வந்து உபயோகப்படுத்துகிறோம். அதனால் புதிய கேமரா மற்றும் லேப் வசதியை மேம்படுத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். போட்டோகிராபி பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறும் போது, "இந்த பள்ளியில் போட்டோகிராபி பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர், ஸ்டுடியோ போட்டோகிராபர், சினிமா கேமிராமேன்களாக உள்ளனர். வீடியோ பயிற்சி பெற்று பலர் தூர்தர்ஷன் மற்றும் தனியார், "டிவி'க்களில் கேமராமேன்களாக பணிபுரிகின்றனர். இங்கு படித்த சக்திதாஸ் என்ற மாணவர் தற்போது, "லோக்சபா' கேமராமேனாக வேலை பார்க்கிறார். இந்த பாடப்பிரிவை ரத்து செய்யாமல், மாணவர்களின் சேர்க்கை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். தொடர்ந்து, மேயர் சுப்ரமணியன் கூறும் போது, "போட்டோகிராபி பாடப்பிரிவு தொடர்ந்து செயல்படுத்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பள்ளியில் போட்டோகிராபி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் எடுத்த போட்டோக்களை சேகரித்து, கண்காட்சி நடத்தப்படும். மாணவர்கள் பயிற்சி பெற கேமராவும், கம்ப்யூட்டர், பிரின்டர் வசதியும், லேப் வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.