Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவு கருவியை பொருத்துவது குறித்து ஆராய குழு

Print PDF

தினகரன் 03.12.2010

மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவு கருவியை பொருத்துவது குறித்து ஆராய குழு

புதுடெல்லி, டிச.3:

மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் 20,000 ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் (கைவிரல் ரேகை பதிவது) முறையை கொண்டு வருவதுபற்றி ஆராய கூடுதல் கமிஷனர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் இந்த முறை அமலில் உள்ளது.

ஆனால் இந்த முறையை பயன்படுத்த தொடக்கம் முதலே ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் மாநகராட்சி பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்த முடியவில்லை.

நகரில் மொத்தம் 1,746 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதில் 923 பள்ளிகளில் நர்சரி வகுப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில் 50,000 நர்சரி குழந்தைகள் உட்பட 9.5 லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். மொத்தம் 20,000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமலேயே பள்ளிக்கு வந்ததாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விடுகின்றனர். இதனால் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் மாநகராட்சியால் எடுக்க முடிவதில்லை. ஆகையால் ஆசிரியர்களின் வருகை பற்றி ஆராய மாநகராட்சியின் கல்வி நிலைக் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்துவது பற்றி ஆராய கூடுதல் ஆணையாளர்(கல்வி) பி.எஸ். தாமஸ் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 6 வாரத்தில் தனது பரிந்துரைகளை மாநகராட்சியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.