Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி சார்பில் அறிவியல் மையம்

Print PDF

தினமணி          07.12.2010

கோவை மாநகராட்சி சார்பில் அறிவியல் மையம்

கோவை, டிச. 6: கோவை மாநகரின் மையப் பகுதியில் மாநகராட்சி சார்பில் அறிவியல் மையம் அமைக்க கல்வி, பூங்காக்கள் குழு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கல்வி, பூங்காக்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. குழுத் தலைவர் ஆர்.கல்யாண்சுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சிக் கல்விப் பிரிவு ஆய்வாளர் சோமசுந்தரி முன்னிலை வகித்தார்.

வஉசி பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி, கல்விக் குழு உறுப்பினர்கள் வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், மீனா லோகநாதன், ஷோபனா செல்வன், சிவகாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சிப் பள்ளி உள்பட அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் நகரின் மையப் பகுதியில் அறிவியல் மையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இம் மையத்துக்கான இடத்தை நேரடியாக ஆய்வு செய்து இறுதி செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனம் மூலமாக திறன் வளர்ப்புப் பயிற்சி அளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு ரூ. 47 லட்சத்தில் புதிய வகுப்பறைகள், சமையல் கூடம், மாணவர்கள் சாப்பிடும் அறை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் மீது மேல்நடவடிக்கைக்காக மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கால்டாக்ஸி டிரைவரால் கடத்திக் கொலை செய்யப்பட்ட பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் ஆகியோருக்கு கல்விக் குழுக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.