Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி துவங்க 6 கிரவுண்டு இடம் கட்டாயம் தேவை : தமிழக அரசு அறிவிப்பு

Print PDF

தினமலர்           15.12.2010

மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளி துவங்க 6 கிரவுண்டு இடம் கட்டாயம் தேவை : தமிழக அரசு அறிவிப்பு

"மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக பள்ளிகள் துவங்க வேண்டுமெனில் ஆறு கிரவுண்டு இடமும், கிராமப்புற பகுதிகளில் மூன்று ஏக்கர் நிலமும் கட்டாயம் இருக்க வேண்டும்' என, கட்டாயக் கல்வி வரைவு சட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, கடந்த ஆண்டு சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்கும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம், 14 வயது வரை உள்ள சிறுவர்கள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்கும் உரிமையை வழங்குகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களும், மாநில அளவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தனி சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான வரைவு சட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி, பொது மக்கள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களை பெறுவதற்காக, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசால் துவக்கப்படும் பள்ளிகள், சிறுவர்களின் வசிப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அமைய வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள், மூன்று கிலோ மீட்டருக்குள் அமைய வேண்டும். குக்கிராமங்களில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்கு சென்று வருவதற்கு ஏற்ப, தமிழக அரசு இலவசமாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளாக இருந்தாலும், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களை ஜாதி, மதத்தை காரணம் காட்டி, பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது. கல்வித்துறை அதிகாரிகள், தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு வீடாக ஆய்வு செய்து, பிறக்கும் குழந்தைகள் பற்றியும், அக்குழந்தைகள் 14 வயது எட்டும் வரை, அவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அதில் முகவரி, பெற்றோரின் வேலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும். 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும் கல்வி பெறுவதை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக, முறையான ஆய்வை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு தனி நபரோ அல்லது குழுவினரோ, பள்ளிகளை லாப நோக்குடன் நடத்தக் கூடாது. பள்ளி கட்டடங்கள் முழுவதையும், கல்வி தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு காரணங்களுக்காக, பள்ளி கட்டடங்களை பயன்படுத்தக் கூடாது. பள்ளிகளை, அரசு அதிகாரிகளோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளோ எந்த நேரம் வேண்டுமானாலும் பார்வையிட்டு, ஆய்வு செய்வார்கள். பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு குறைந்தபட்ச விதிமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிகள் துவங்க ஆறு கிரவுண்டு இடம் கட்டாயம் தேவை. மாவட்ட தலைநகரங்களில் எட்டு கிரவுண்டு இடமும், நகராட்சி பகுதிகளில் 10 கிரவுண்டு இடமும், சிறிய நகர பகுதிகளில் ஒரு ஏக்கர் மற்றும் கிராமப்புறங்களில் மூன்று ஏக்கர் நிலமும் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி, வாடகை கட்டடத்தில் இயக்க முடிவெடுத்தால், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் குத்தகை உரிமம் பெற வேண்டும். சட்டத்தில் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றாதது ஆய்வில் தெரிந்தால், பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும். இவ்வாறு வரைவு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு சட்டம் தொடர்பாக, பொது மக்கள், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, வரைவு சட்டத்தில் தேவையான மாற்றங்களை கொண்டு வந்து, சட்டத்தை அமலுக்கு கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.