Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகள் பராமரிப்பு : நிதி குழுவில் ஒப்புதல்

Print PDF

தினகரன்     05.01.2011

மாநகராட்சி பள்ளிகள் பராமரிப்பு  : நிதி குழுவில் ஒப்புதல்

கோவை, ஜன.5:

கோவை மாநகராட்சி நிதி குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் லட்சுமணன், சுந்தர்ராஜன், துரைராஜ், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், நிதி குழு தலைவர் நந்தகுமார், கவுன்சிலர்கள் செந்தில்குமார், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை மாநகராட்சியின் கிழக்கு, தெற்கு, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஆரம்ப பள்ளி, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் துப்புரவு தொழிலாளர்கள், குழாய் பொருத்துநர், மின் கம்பியாளர், மேற்பார்வையாளர் மூலம் தூய்மை பணி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒரு ஆண்டிற்கு தூய்மை பணி நடத்தி பராமரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ஒரு ஆண்டு தூய்மை பணி பராமரிப்பிற்கு 45.25 லட்ச ரூபாய், கிழக்கு மண்டலத்திற்கு 49.92 லட்ச ரூபாய், வடக்கு மண்டலத்திற்கு 43.70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன் மார்க்கெட் ஏலம் கடந்த 29ம் தேதி நடந்தது. மொத்தம் 64 கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 1, 24, 38, 39, 54, 56 எண் கடைகளுக்கு மறு ஏலம் விட முடிவு எடுக்கப்பட்டது. இரு கடைகளுக்கு ஏலம் கோராமல் விட்டதால் மறு ஏலம் கொண்டு வரப்படவுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் 8 கடைகளுக்கு மறு ஏலம் விட நிதிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

தியாகி குமரன் மார்க்கெட்டில் கடந்த 24&12&2008ம் தேதி நடந்த மன்ற கூட்ட தீர்மானத்தில் படி இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்படவில்லை. பாதுகாப்பு, வருவாய் காரணமாக இப்பகுதியில் மீண்டும் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.