Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.24 லட்சம் நிதி

Print PDF

தினமணி                 01.08.2012

 5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.24 லட்சம் நிதி

மயிலாடுதுறை, ஜூலை 31: மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 5 நகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும், அடிப்படை வசதிகளைச் செய்யவும்  நகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு  செய்வதற்கு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மயிலாடுதுறை நகர்மன்றக் கூட்டம், தலைவர்  எஸ். பவானி  தலைமையில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்  உறுப்பினர்கள் பேசியது:

ரமேஷ்: நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், பழுதடைந்துள்ள சாலைகளை  சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். க. ரகு: காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய அளவில் நகராட்சியின்  அனுமதி பெறாமல்  டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள்  சரிந்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பதை  தடுக்க வேண்டும்.

ராஜேந்திரன்: கச்சேரி  சாலையில்  மக்கள் அதிக அளவில் வந்து போவதால், இந்தப் பகுதியில்  சுகாதார வளாகம் அமைத்து, நகர்  தூய்மை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வை. தனபால்: சின்னக்கடைவீதி,மகாதானத் தெரு சந்திப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கும்  இடையூறு  ஏற்படுவதால், கடையை  அகற்றவேண்டும்.

ஜி.கோவிந்தராஜன்: சித்தர்க்காடு பகுதியில்  விநியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து  காணப்படுவதால் பொது மக்கள்  நோயுறும் நிலை உருவாகியுள்ளது. கூட்ட முடிவில், மயிலாடுதுறை நகராட்சியின் கீழ் செயல்படும், திருவிழந்தூர் நகராட்சித் தொடக்கப்பள்ளியில்   கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 4.50 லட்சம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி  கட்டடங்கள்  பராமரிப்பிற்கு  ரூ. 4 லட்சம்,  தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் சுகாதார  வளாகம்  மற்றும் புதிய வகுப்பறைகள்  கட்டுவதற்கு   ரூ. 13 லட்சம், கூறைநாடு எரகாலித் தெரு நகராட்சி பள்ளி கட்டடம் பராமரிப்புக்கு ரூ. 1 லட்சம் ஆகியவை நகராட்சி கல்வி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.