Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சுகாதார அட்டை: கிழக்கு தில்லி மாநகராட்சி திட்டம்

Print PDF
தினமணி                        07.08.2012

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சுகாதார அட்டை: கிழக்கு தில்லி மாநகராட்சி திட்டம்

புது தில்லி, ஆக. 6: கிழக்குத் தில்லி மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவதையொட்டி, அவர்களுக்கு சுகாதார அட்டைகளை வழங்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

முகாமின்போது, கிழக்குத் தில்லி மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் பயிலும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலப் பரிசோனை நடத்தப்படும். அதன் பிறகு சுகாதார அட்டைகள் வழங்கப்படும்.

 மாநகராட்சியின் மாணவர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி அளிக்கும் வகையில் இந்த அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து, மாநகராட்சி ஆணையர் எஸ்.எஸ். யாதவ் கூறியதாவது:

ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தும் யோசனை உள்ளது.தொடக்கத்தில் சுகாதார முகாம்களை நடத்துவதற்கு 20 குழுக்களை ஏற்படுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு டாக்டர், மருந்தாளுநர், நர்ஸ் ஆகியோர் இருப்பார்கள். இந்தப் பணியாளர்கள் மாணவர்களுக்கு சுகாதார அட்டைகளையும் வழங்குவர்.

ஷாதரா வடக்கு, தெற்கு ஆகிய இரு மண்டலங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த முகாம்களை நடத்த சுகாதார, கல்வித் துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 16-ம் தேதி முகாம்களை தொடங்க உள்ளோம் என்றார் அவர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சை பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்படும் மருத்துவமனை சுகாதார அட்டையில் குறிப்பிடப்படும்.தீவிரமான நோய் இருப்பது கண்டறியப்பட்டால் சுவாமி தயானந்த் மருத்துவமனை, ஹிந்து ராவ் மருத்துவமனை போன்றவற்றுக்கு அவர்கள் பரிந்துரை செய்யப்படுவர்.

மாநகராட்சியால் பரிந்துரைக்கப்படும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவருக்குரிய சிகிச்சைக் கட்டணம், சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.மாணவர்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் பல்நோக்கு மருத்துவமனையை கர்வால் நகரில் கட்ட மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.கிழக்குத் தில்லி மாநகராட்சியில் உள்ள 390 ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 2.40 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Last Updated on Wednesday, 08 August 2012 05:16