Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி

Print PDF

தினமணி                10.05.2013

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி

 

நாடு முழுவதும் நடைபெற்ற ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த இரண்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி.க்கான முதல்நிலை (ஒஉஉ-ஙஅஐச) நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியாயின. இதில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த ஆட்டோ டிரைவர் மகன் ஸ்ரீநாத் மற்றும் விவசாயி மகள் பிரியங்கா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதால் இவர்களுக்கு என்.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் இடம் கிடைக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்தக்கட்டமாக (JEE-MAIN) நுழைவுத் தேர்வை இந்த மாணவர்கள் எழுத வேண்டும். அதில் முதல் 10 ஆயிரம் ரேங்குகளில் இடம்பெற்றால் அவர்களுக்கு ஐ.ஐ.டி.க்களில் சேர்க்கை கிடைக்கும்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள், முக்கிய நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அவந்தி என்ற அமைப்பு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கியது. இதில் இரண்டு மாணவர்கள் ஐ.ஐ.டி. முதல் நிலைத் தேர்வில் தேர்வாகியுள்ளனர்.

விவசாயி மகள்: இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பிரியங்காவின் தந்தை சண்முகம் விவசாயி ஆவார். விழுப்புரத்தை சேர்ந்த பிரியங்கா, சென்னையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, புல்லா அவென்யு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். அவந்தி அமைப்பின் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்.

இவர் 360-க்கு 83 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கும் திருச்சி என்.ஐ.டி.யில் இடம் கிடைத்துள்ளது. இப்போது இவர் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட தேர்வுக்கு தயாராகி வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 1096 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்ட தேர்வில் தேர்ச்சிபெற்று ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிப்பேன். என்னுடைய 3 தங்கைகளையும் நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்றார்.

ஆட்டோ டிரைவரின் மகன்: ஸ்ரீநாத் சென்னையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் எம். குணசேகரனின் மகன் ஆவார். சைதாப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த ஸ்ரீநாத், அவந்தி அமைப்பு நடத்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளார். முதல்கட்ட தேர்வு எழுதிய இவர், 360-க்கு 57 மதிப்பெண் எடுத்துள்ளார். இதன்மூலம் இவர் திருச்சி என்.ஐ.டி.யில் படிக்க தகுதி பெற்றுள்ளார்.

ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட தேர்வில் வெற்றிப்பெற்றால் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்களில் நேரடியாக படிக்கலாம். இவர் பிளஸ் 2 தேர்வில் 870 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவந்தி மற்றும் மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவந்தி அமைப்பினர்தான், இந்த தேர்வில் என்னால் தேர்ச்சியடைய முடியும் என்று கூறி ஊக்கமளித்ததோடு, அதற்கான பயிற்சிகளையும் அளித்தனர். ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவேன், என்றார்.