Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளஸ்-2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

Print PDF
தினத்தந்தி   10.05.2013            

பிளஸ்-2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி மாணவிகளுக்கு மேயர் பாராட்டு


நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.53 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளை மேயர் சைதை துரைசாமி பாராட்டினார்.

மாணவிகளுக்கு வாழ்த்து

பிளஸ்-2 தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடம் பெற்ற மாணவி வி.வீரச்செல்வி, 2-ம் இடம் பெற்ற மாணவிகள் பி.நித்யா மற்றும் சி.பிரியா, 3-ம் இடம் பெற்ற ஆயிஷா சித்திக் மற்றும் மாநில அளவில் புவியியல் பாடத்தில் முதல் இடம் பெற்ற திருவான்மியூர் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி ஜோதி ஆகியோர் மேயர் சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 510 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 568 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

85.53 சதவீதம் தேர்ச்சி

இதில் மாணவர்கள் 78.65 சதவீதமும், மாணவிகள் 89.6 சதவீதமும் என மொத்தம் 85.53 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியின் புல்லா அவென்யூ பள்ளி மாணவி வி.வீரச்செல்வி 1,145 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

சைதாப்பேட்டை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நித்யா, வேளச்சேரி மேல்நிலைப்பள்ளி மாணவி சி.பிரியா ஆகிய 2 பேரும், 1,142 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், புத்தா தெரு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திக் 1,138 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் முதல் இடம்

மேலும், திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வ ஜோதி புவியியல் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். 2012-2013-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சுப்புராயன் மற்றும் நெசப்பாக்கத்தை சேர்ந்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இரண்டு பள்ளிகளுக்கும் சென்னை மாநகராட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் பள்ளியின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய 32 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25 பள்ளிகள் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளன.

மேல்படிப்பு செலவுகளை மேயர் ஏற்றார்

சென்னை மாநகராட்சி கல்வி துறையின் சார்பில் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் அடிப்படையில் இந்த அளவிற்கு மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினம் பரிசுகள் பெற்ற 5 மாணவிகளின் மேல் படிப்பு செலவுகள் யாவும் எனது சொந்த செலவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பா.பெஞ்சமின், இணை கமிஷனர்(கல்வி) தி.ந.வெங்கடேஷ், கல்வி அதிகாரி கே.ரவிச்சந்திரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.