Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழை மாணவியர் எதிர்காலக் கல்விக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம்

Print PDF
தினமணி        01.06.2013

ஏழை மாணவியர் எதிர்காலக் கல்விக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவாதம்


பத்தாம் வகுப்பு படிப்பதே கஷ்டம் என்றிருந்த ஏழை மாணவ, மாணவியர், மாநகராட்சிப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றதன் மூலமாக குறைந்தபட்சம் பிளஸ் 2 வரையிலான படிப்பை கோவை மாநகராட்சி உறுதி செய்துள்ளது.

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம், கல்வி ஊக்கத் தொகை மற்றும் அவர்கள் படிக்க விரும்பும் படிப்புக்கான செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக மேயர் செ.ம.வேலுசாமி அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்துடன் அவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கட்டணங்களும் மாநகராட்சி சார்பில் செலுத்தப்பட்டது.

இதன் மூலமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தத் திட்டமிட்டிருந்த மாணவ, மாணவியர் பிளஸ் 2 வரை படிக்கவும், பிளஸ் 2வுடன் படிப்பை நிறுத்தத் திட்டமிட்டிருந்த பலரது கல்விக் கனவு கல்லூரி வரையிலும் விரிவடைந்தது. இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு மாநகராட்சிப் பள்ளிகளிலும் முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களுக்குக் கல்விக் கடன் முகாமும் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டுக் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

இதன் மூலமாக கோவை மாநகராட்சி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயில வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 11 மாதத்தில் தாய், தந்தையை இழந்தாலும் கூலித் தொழிலாளியான சித்தப்பா எஸ்.தங்கத்தின் ஆதரவில் வளர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாவது இடம் பெற்ற ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமலதா, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

வறுமை துரத்தினாலும் பல்வேறு இடையூறுகள் தொடர்ந்தாலும் கல்வி ஒன்றுதான் தங்கள் வாழ்க்கையின் கலங்கரை விளக்கம் என்பதை உணர்ந்து படித்த மாணவ, மாணவியருக்கு மாநகராட்சியின் கல்வி உதவி மிகப் பெரும் வரமாக அமைந்துள்ளது. இதுதான் சிறப்பாகப் படித்தவர்களை மேலும் சாதிக்கத் தூண்டும் உந்துசக்தி என்றனர் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்.