Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.2 கோடி செலவில் 1 1/2 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

Print PDF

மாலை மலர் 30.09.2009

ரூ.2 கோடி செலவில் 1 1/2 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, செப். 30-

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சத்தியபாமா, கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

திராவிட நாடு முனுசாமி (தி.மு..):- சென்னையில் மழைகாலம் நெருங்குவதால் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

மேயர் மா. சுப்பிரமணியன்:- தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், திருவொற்றியூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கணேசபுரம், வேப்பேரி, கொளத்தூர், புரசைவாக்கம், கெல்லீஸ், கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்களில் புதிய மழை நீர் வடிகால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 554 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

145
கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைக்காலம் நெருங்குவதற்குள் தூர்வாரப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 77.29 கோடி செலவில் 143 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

லாசர் (காங்கிரஸ்):- நுங்கம்பாக்கம் மயான பூமியில் கியாஸ் தகன மேடை அமைக்கப்படுமா? சூளைமேட்டில் மாநகராட்சி பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அரசு மதுபான கடைகள் அனுமதித்து உள்ளனர். அவற்றைவேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேயர்:- நுங்கம்பாக்கத்தில் இன்னும் 6 மாதத்தில் நவீன கியாஸ் தகன மேடை கட்டி முடிக்கப்படும்.

அன்புத்துரை (தி.மு..):- உடல் உறுப்பு தானத்திற்கான படிவங்கள் கவுன்சிலர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும். நான் என் உடல் உறுப்புக்களை தானம் செய்கிறேன்.

ஜமுனா கேசவன் (பா...):- மாநகராட்சி சமுதாய நலக்கூடங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டதால் வியாபார கூடமாக மாறி உள்ளது. மயிலாப்பூர்- ஆர்.கே. மடம் சாலையில் உள்ள சமூக நலக்கூடத்தில் பல மாதங்களாக பொருட்காட்சி நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு திருமணம் நடத்த தருவதில்லை.

பிரபாகரன் (தே.மு.தி..):- வில்லிவாக்கம் சிட்கோ நகர் பூங்காவில் வார்டு அலுவலகம் கட்டுவதற்கு தி.மு.. வினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதிகாரிகள் பூமி பூஜை போட்ட பிறகு கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்யப்போவதாக அவர் கூறினார்.

மேயர் மா. சுப்பிரமணியன்:- யாரும் அரசு பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. பூங்கா இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதி பெற வேண்டும். அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசு அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

சைதை ரவி (எதிர்க்கட்சி தலைவர்):- தனியார் உபயோகத்தில் இருக்கும் மாநகராட்சி நிலங்களை மீட்க வேண்டும். நகரில் ரத்தம் சோதிக்கும் சோதனை கூடங்கள் தெரு தெருவாக தோன்றியுள்ளது. இந்த சோதனை கூடங்களில் முறையான சோதனை நடைபெறுவது இல்லை. எனவே இந்த சோதனை கூடங்களை மாநகராட்சி சுகாதாரத்துறை சோதனையிட வேண்டும்.

ராமலிங்கம் (ஆளுங்கட்சி தலைவர்):- மாடம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி சார்பில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி கட்டுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் கூட்டத்தில் ஜெயராமன் பிரகாஷ் (பா...), கிருபாகரன் (காங்.), மீனா (இந்திய கம்யூனிஸ்டு) உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 255 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட உள்ளது. ரூ.2 கோடி 19 லட்சம் செலவில் புதிய வண்ணத்தில் சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டது.

Last Updated on Thursday, 01 October 2009 05:41