Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் உரையாடல்

Print PDF

மாலை மலர் 16.11.2009

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் உரையாடல்

சென்னை, நவ 16-

மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிறை துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மற்ற மாவட்டங்களில் உள்ள நிர்வாகத்தை கண்காணித்து முக்கிய முடிவுகள், உத்தரவுகள் பிறப்பிக்க வீடியோ கான்பரன்சிங் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மாவட்ட அதிகாரிகளுடன் உயர் அதிகாரிகள் வீடியோ மூலம் உரையாடல் நடத்தி முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வார்கள். செயற்கை கோள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தொழில் நுட்பத்தில் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த திட்டம் பள்ளிக்கல்வி துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி அளவில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 5000 அரசு பள்ளிக் கூடங்கள் இணைக்கப்படுகிறது.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கல்வி கற்பித்தல் முறை, இடைநிற்றல், வருகை பதிவேடு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 400 வட்டார வள மையங்களில் சென்னையில் இருந்தவாறு தொடர்பு கொண்டு வீடியோ கான்பரன் சிங் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இந்த கான்பரன்சிங்கில் அரசு நலத்திட்டங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், பள்ளிகளின் சுற்றுப்புற தூய்மை, போன்றவைகள் குறித்து விளக்கி பேசப்படுகிறது.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து கல்வி அதிகாரிகள் கருத்துக்களை வழங்குகிறார்கள். நேரடியாக டெலிபோனிலோ செல்போனிலோ பேசுவதை காட்டிலும் ஆவணங்களை வைத்து வீடியோ படம் மூலம் இருவரும் உரையாடல் செய்து கொள்ள இத்திட்டம் உதவி செய்கிறது.

இதனை சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.. வளாகத்தில் சர்வ சிக்ஷியா அபியா திட்ட கட்டிடத்தில் பள்ளிக் கல்வி இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி தொடங்கி வைத்து தலைமை ஆசிரியரிடம் உரையாற்றினார். அங்குள்ள அறையில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வீடியோ படத்துடன் பேச முடியும்.

இந்த திட்டம் அடுத்த கட்டமாக ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். இதன் தொடக்க விழாவில் இணை இயக்குனர்கள் தர்மராஜேந்திரன், ராமேஸ்வர முருகன், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 16 November 2009 11:36