Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.1 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச புத்தக பை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

மாலை மலர் 28.01.2010

ரூ.1 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச புத்தக பை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சத்தியபாமா, கமிஷனர் ராஜேஷ்லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சைதை ரவி (எதிர்க்கட்சித் தலைவர்) கோட்டூர்புரத்தில் பிரமாண்டமான நூலகம் அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் நூல்களை திரட்டி வருகிறார்கள். நாமும் 1 லட்சம் நூல்களையாவது திரட்டி கொடுக்க வேண்டும்.

மேயர் மா.சுப்பிரமணியன்: இது நல்ல யோசனை. மன்ற உறுப்பினர்களுக்கு அரசு விழாக்களின் போது நூல்கள்தான் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தங்கள் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களையும் தொடர்பு கொண்டு அனைவரும் நூல்கள் திரட்ட வேண்டும். 1 லட்சம் நூல்களை சேகரித்து வழங்குவோம்.

புவனேசுவரி (சுயே): சென்னையில் கொசுக்கள் அதிகமாக உள்ளது. மர்ம காய்ச்சல் உள்பட பல நோய்கள் பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்த போதுமான மருந்துகளை மாநகராட்சி வாங்க வேண்டும். கொசு ஒழிப்புக்கான விழிப்புணர்வையும் தீவிரப்படுத்த வேண்டும்.

ஜெயகலா பிரபாகர் (காங்கிரஸ்): எண்ணூர் முதல் செம்மஞ்சேரி வரை உள்ள பக்கிங்காம் கால்வாயை சீரமைத்து படகு போக்குவரத்து ஏற்படுத்தப்படுமா?

மேயர் மா. சுப்பிரமணியன்: இந்த கால்வாயை சீரமைப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்பட உள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு படகு போக்குவரத்து தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சுபாஸ் சந்திரபோஸ் (தி.மு..): துணை முதல்வர் மு..ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநகராட்சி சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

ருக்மாங்கதன்: திருமண மண்டபங்களில் சுகாதார சட்டத்தின் கீழ் துப்புரவு வரிவசூல் செய்ய வேண்டும். போலீஸ் கமிஷனர் ரோட்டில் தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி அழகிய பூங்கா அமைக்க வேண்டும்.

மதுபானக்கடைகளில் நடத்தப்படும் "பார்" களுக்கு வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. உரிமம் பெறாத ஒரு மதுபானக்கடை மூடப்பட்டது. மறுநாளே திறக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற மதுபான பார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 830 மாணவ- மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் செலவில் இலவச புத்தக பைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் 3 புதிய பாலங்கள் கட்டவும் கூட்டத்தில, அனுமதி வழங்கப்பட்டது. ரூ.3 கோடியே 47 லட்சம் செலவில் அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே மேத்தாநகர் ஆபீசர்ஸ் காலனி முதல் தெருவையும், வெங்கடாசலபதி தெருவை யும் இணைத்து ஒரு பாலம் கட்டப்படும்.

ஓட்டேரி ஒல்வா கால்வாய் குறுக்கே நரசிம்மாநகர் மற்றும் எம்.எஸ்.நகரை இணைத்து ஒருபாலம் கட்டப்படும். ரூ.1 கோடியே 27 லட்சம் செலவில் விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே பாரி தெருவில் வாகன பாலம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மயானபூமிகளில் முழுநேர காவலர்களை நியமிப்பது, ஆழ்வார் பேட்டையில் ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் பல்நோக்கு சிகிச்சை ஆஸ்பத்திரி அமைப்பது உள்பட 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 28 January 2010 11:44