Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.46 லட்சத்தில் ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்க முடிவு

Print PDF

தினமணி 16.02.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.46 லட்சத்தில் ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்க முடிவு


கோவை, பிப்.15: கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.46 லட்சத்தில் ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்க நிதிக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிதி மற்றும் வரி விதிப்புக் குழுக் கூட்டம் குழுத் தலைவர் நந்தகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார், உதவி ஆணையர் (கணக்கு) கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய குழு உறுப்பினர் சோபனா செல்வன், உலகத் தமிழ் மாநாடு நெருங்கி வரும் நிலையில் பட்ஜெட்டுக்கு முன்பாக நிலுவையில் இருக்கும் சொத்து வரியை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மற்றொரு உறுப்பினர் வி.கே.எஸ்.கே.செந்தில்குமார் பேசும்போது, சிவானந்தா காலனி ராஜு சாலை கிழக்குப் புறத்தில் உள்ள பழைய வணிக வளாகம் இருந்த இடத்தில் நவீன வணிக வளாகம் கட்ட தனி நிதி ஒதுக்க வேண்டும். நிலத்தடி மின்கேபிள் அமைக்கப்படும் கிராஸ்கட் சாலை மற்றும் இதர சாலைகளில் கான்கிரீட் கால்வாய்களை மாநகராட்சி நிதியில் இருந்து அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு திட்டச் சாலைகளை அமைக்க பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி மேனிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க ரூ.46 லட்சத்துக்கு அனுமதி வழங்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் உதவி ஆணையர் பொன்முடி, மாநகராட்சி கவுன்சில் குழு செயலர் சுந்தர்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 06:03