Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் மாநகராட்சிப் பள்ளிகள்

Print PDF

தினமணி 03.03.2010

அரசு பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் மாநகராட்சிப் பள்ளிகள்

மதுரை, மார்ச் 2: தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுகளில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றன என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறினார்.

நகர்ப்புறக் களஞ்சிய வட்டாரங்கள் இணைந்து உருவாக்கிய களஞ்சிய நகர்ப்புற மண்டலத்தின் 10-ம் ஆண்டு நிறைவு, உலக மகளிர் தினம், நகர்ப்புற மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மாநகராட்சி கமிஷனர் பேசியதாவது:

நாட்டின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக கேரளம் திகழ்வதற்குக் காரணம் அங்கு படித்தவர்கள் அதிகம் இருப்பதுதான். எனவே உலக அரங்கில் இந்தியா சிறந்த நாடாகத் திகழ வேண்டும் எனில் கல்வியறிவில் மக்கள் சிறந்து விளங்க வேண்டும். வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்நோக்கத்தை முன்வைத்தே மதுரை மாநகராட்சி செயல்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகப் பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சியை எட்டி வருகின்றன.

மேலும், மதுரை நகருக்குள் இருக்கும் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சொந்த இடமிருந்தால் சிமிண்ட் வீடு கட்டிக்கொள்ள அரசு ரூ.91 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இச்சலுகையை மக்கள் பயன்படுத்தி வீடு கட்டட வேண்டும் என்றார்.

மாநகராட்சி செயற்பொறியாளர் சக்திவேல் பேசுகையில், மதுரை மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 82 சதம் என்பதை வரும் ஆண்டில் 95 சதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை வாழ்த்திப் பேசினார். களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் அகிலாதேவி அறிக்கை வாசித்தார். மாநகராட்சி முதன்மை சுகாதார அலுவலர் சுப்பிரமணியன், களஞ்சிய அறக்கட்டளை முதன்மை நிர்வாகி பத்மாவதி, எல்.ஐ.சி. கிளை மேலாளர் சுந்தரராஜன், கனரா வங்கி கிளை மேலாளர் தனபாண்டியன் ஆகியோர் பேசினர்.

முன்னதாக மருத்துவக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மதுரை மண்டல களஞ்சிய இயக்கத் தலைவி தாயம்மாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:28