Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

படிக்காத, பள்ளிக்கு வராத மாணவர்கள் 12 பேர் மாநகராட்சி பள்ளியிலிருந்து நீக்கம்

Print PDF

தினமலர் 10.03.2010

படிக்காத, பள்ளிக்கு வராத மாணவர்கள் 12 பேர் மாநகராட்சி பள்ளியிலிருந்து நீக்கம்

கோவை : சரியாக பள்ளிக்கு வராத, படிக்காத மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து நீக்கம் செய்யப்பட்டனர். பீளமேட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் 12 பேர் சரியாக பள்ளிக்கு வராததாலும், கால் மற்றும் அரையாண்டு தேர்வுகளில் சிலவற்றில் பங்கேற்காதது, பங்கேற்றதில் போதுமான மதிப்பெண் பெறாதது; ஒழுங்கீனம் ஆகிய காரணங்களுக்காக 12 மாணவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு வரும் 23ம் தேதி துவங்குகிறது. ஹால் டிக்கெட் அனைத்தும் வழங்கிய நிலையில் தேர்வு எழுத அனுமதிக்கவில்லையே என்ற ஏக்கத்தில், மாணவ,மாணவியரின் பெற்றோர் நேற்று கோவை மாநகராட்சி கமிஷனரிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டனர். தங்களது குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வு எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதிலளித்த கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது: போதுமான வருகைப்பதிவு இல்லாதவர்கள், பருவத்தேர்வுகள், இடைநிலை பருவத்தேர்வுகளில் மதிப்பெண் பெறாதவர்களை எப்படி தேர்வு எழுத அனுமதிக்க முடியும்.எங்களால் தேர்வு எழுத முடியவில்லை என்று சொல்லி தாங்களாக முன் வந்து ஐந்து பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளனர். மீதமுள்ள ஏழு பேரில் மூன்று பேருக்கு வருகைப்பதிவு இல்லை.

ஒவ்வொருவரும் இரண்டு மாதம் மூன்று மாதம் வரை பள்ளிக்கு வரவில்லை. மற்ற இருவர் குடும்ப சூழலால் தேர்வு எழுத முடியவில்லை என்று சொல்கின்றனர். இப்பிரச்னையை அரசியலாக்க முயற்சித்து சிலர் தூண்டி விட்டுள்ளனர். டி.சி.,கொடுத்த 12 பேரில் யாருக்காவது தேர்வு எழுத வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தயாராகி எழுதட்டும்.நாளை( இன்று) காலை பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும். . இதில் பெற்றோர்கள் பங்கேற்று தங்கள் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கும் பட்சத்தில் அனுமதிக்கிறோம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு அதே பள்ளியில் மாணவர்கள் படிக்க வாய்ப்பு கொடுக்கிறோம். இதை பயன்படுத்திக் கொள்ளட்டும். மாணவர்கள் படிப்பதில் ஆசிரியரை காட்டிலும் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார் கமிஷனர்.

Last Updated on Wednesday, 10 March 2010 06:30