Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இந்தியாவில் முதல் முறை கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: 33,000 மாணவர்கள் பயன்

Print PDF

தினமலர் 23.03.2010

இந்தியாவில் முதல் முறை கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: 33,000 மாணவர்கள் பயன்

கோவை: இரண்டு கோடி ரூபாய் செலவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது இந்த நூதன திட்டம். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். பெற்றோர் அதிகாலையில் கூலி வேலைக்கு சென்று விடுவதால், பல குழந்தைகள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வருவது, மாநகராட்சிக் கல்விக்குழுவின் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் ஊட்டச்சத்து உணவியல் துறையிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டது. ஆய்வு பணிக்காக ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பல்கலை அளித்த அறிக்கையில், பெரும்பாலான மாணவ, மாணவியர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் காலை வேளையில் சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 85 மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடையும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இத்திட்டம், மாநகராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநகராட்சிக் கல்விக்குழுத் தலைவர் கல்யாண சுந்தரம் இது பற்றி கூறியதாவது: ஆறு மாதங்களாக இது பற்றி ஆய்வு நடத்தி வந்தோம். ஆய்வில் மாணவர்களின் உடல் சார்ந்த சில குறைகள் கண்டறியப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், 33,000 மாணவர்களுக்கு தினமும் உணவு சமைக்க வேண்டும் என்பதால், எந்தவித சுகாதார சீர்கேடுகளும் நேராதவாறு கவனமாக நிறைவேற்ற வேண்டிய திட்டமாக உள்ளது. திட்டத்துக்கு அனுமதி கிடைத்தவுடன், அனைத்து கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பாக நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்வோம். வரும் கல்வியாண்டு முதல் நிறைவேற்றப்படும். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் உடல் நலம் மேம்படும் என்பதால், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்; மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயரும், என்றார்.

Last Updated on Tuesday, 23 March 2010 07:45