Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாங்க... வாங்க! படிக்க வாங்க!

Print PDF

தினமலர் 30.04.2010

வாங்க... வாங்க! படிக்க வாங்க!

கோவை: பள்ளி சேர்க்கையை வலியுறுத்தி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மேள வாத்தியங்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். 'பள்ளி வயதுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்டம், இந்தாண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மேற்பார்வையாளர் ராமதாஸ் பேரணியை துவக்கி வைத்தார்.

மாணவர்களில் சிலர் தொழில் ரீதியிலான வாத்தியக்காரர்களுக்கு இணையாக மேள வாத்தியம் அடித்தபடி முன்னே செல்ல, பள்ளி தலைமை ஆசிரியர் சின்னபொண்ணு தலைமையில் ஆசிரியர்களும், பிற மாணவர்களும் வழி நெடுக மாணவர் சேர்க்கையை வலியுறுத்தும் நோட்டீஸ்களை வினியோகித்தபடி சென்றனர். முன்னதாக அனைத்து மாணவர்களும் பேரணியில் பங்கேற்க உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பி வந்தனர். வெயில் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி காலில் செருப்பு அணியாத சில மாணவர்களை பேரணியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவர்கள் ஏக்கத்துடன் பார்த்து நின்றனர். சித்தாபுதூரில் உள்ள பள்ளியில் துவங்கிய பேரணி, முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

Last Updated on Friday, 30 April 2010 05:49