Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு பயிற்சி

Print PDF

தினமலர் 07.10.2010

மாநகராட்சி மாணவர்களுக்கு ஐ..டி., நுழைவுத் தேர்வு பயிற்சி

சென்னை : ""சென்னை மாநகராட்சி 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் 200 பேருக்கு அடுத்த மாதம் முதல் ஐ..டி., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்,'' என, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னை ஐ..டி., மேலாண்மை கல்வித் துறை சார்பில் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 67 பேர், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 33 பேர் என 100 பேருக்கு இந்த மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த மூன்று நாள் பயிற்சி, பெரியளவில் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு உதவும்.

இதை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 121 பேருக்கு 10 லட்ச ரூபாய் செலவில் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இதற்கு முன் அண்ணா பல்கலையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும் நிச்சயமாக கல்வியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. 1995ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி 50 சதவீதமாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி 40 - 50 சதவீதமாகவும் இருந்தது. அது தற்போது பிளஸ் 2வில் 85 சதவீதமாகவும், 10ம் வகுப்பில் 86 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

அண்ணா பல்கலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிய பின், மாநகராட்சி மாணவர்கள் தகுதி அடிப்படையில் அண்ணா பல்கலையில் சேரும் நிலை உருவாகியுள்ளது. ..டி., பயிற்சியை தொடர்ந்து மாநகராட்சி மாணவர்கள், ..டி.,யிலும் சேரும் நிலை உருவாகும். சென்னை மாநகராட்சி 9ம் வகுப்பு மாணவர்கள் 100 பேர், பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, "பிட்ஜி' மையத்தில் ஐ..டி., - ஜே..., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி அடுத்த மாதம் இறுதியில் துவக்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.

சென்னை ஐ..டி., இயக்குனர் ஆனந்த் பேசுகையில், "மாணவர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்பதால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டியது அவசியம். தலைமை பொறுப்பில் இருக்கும் தலைமையாசிரியர்கள் பதட்டம் அடையாமல் இருப்பது அவசியம். உலகளவில் நம்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்தினால், நாட்டின் சொத்தாக மாறுவர். தவறாக கையாண்டால், மிகப்பெரிய பிரச்னையாக மாறும்' என்றார்.

மாநகராட்சி துணை கமிஷனர் அனு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ..டி., மேலாண்மை கல்வித்துறை தலைவர் கணேஷ் வரவேற்றார். மாநகராட்சி கல்வி அலுவலர் மாதவ பிள்ளை நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 07 October 2010 07:46
 

கல்விக்குழு தலைவர், கமிஷனர் பேட்டி மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த நடவடிக்கை

Print PDF

தினகரன் 05.10.2010

கல்விக்குழு தலைவர், கமிஷனர் பேட்டி மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த நடவடிக்கை

கோவை, அக். 5: கோவை மாநகராட்சிபள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கல்விக்குழு தலைவர் மற்றும் கமிஷனர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா முன்னிலை வகித்தார். துணை கமிஷனர் பிரபாகரன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், ஷோபனா, மீனா லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணி குறித்தும் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர் ந்து கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியின் கீழ் மேல்நிலைப்பள்ளிகள்& 16, உயர்நிலைப்பள்ளிகள்& 10, நடுநிலைப் பள்ளிகள்&14, மாற்றுத்திறனாளி பள்ளி&1 என மொத்தம் 82 பள்ளி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இப்பள்ளிகளில் நவீன உணவருந்தும் கூடம், குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம், நவீன கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. 29 பள்ளிகளுக்கு மல்டி மீடியா கணினி வழங்கப்பட்டுள்ளன.

மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழிகாட்ட வாழ்க்கை வழிகாட்டி வகுப்பு நடத்தப்பட்டது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் 9,838 மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். 20 பள்ளிகளில் மாணவியர் பயன்பெற நாப்கின் வெண்டிங் இயந்திரம் மற்றும் இன்சினரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பள்ளி மாணவர்கள் 9628 பேருக்கு ஷூ மற்றும் காலுறை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை வாங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 783 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மாலை நேரப் படிப்பகம் செயல்படுகிறது. மாநகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் ஸ்மார்ட் ரூம் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 550 மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளியில் கல்வி மற்றும் அடிப்படை வசதி தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மேலும் பள்ளிகளின் கல்வி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், கமிஷனர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்தனர்.

 

மேலும் 40 மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: மேயர்

Print PDF

தினமணி 29.09.2010

மேலும் 40 மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: மேயர்

சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டம். உடன் ஆணையர் ராஜேஷ் லக்கானி.

சென்னை, செப்.28: சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்திடும் வகையில் 40 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:

பொதுமக்கள் நலன் கருதி பல் மருத்துவமனை இல்லாத மண்டலம் 3-ல் இளங்கோ நகர்,

மண்டலம் 4-ல் செம்பியம், மண்டலம் 5-ல் டி.பி. சத்திரம், மண்டலம் 6-ல் புதுப்பேட்டை, மண்டலம் 7-ல் நுங்கம்பாக்கம், மண்டலம் 9-ல் கோட்டூர்புரம், மண்டலம் 10-ல் வேளச்சேரி ஆகிய 7 மண்டலங்களில் புதிதாக பல் மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளன.

இங்கு பணிபுரிவதற்காக 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 7 பல் மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 9 இடங்களில் 3.66 கோடியில் பாலங்கள், சுரங்கப் பாதைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக 3.92 கோடி செலவில் ஆர்க்காடு சாலையில் உள்ள கோடம்பாக்கம் மேம்பாலம் பழுதுபார்த்து, மேம்படுத்தும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வலையுடன் கூடிய கதகதப்பு மெத்தைகள் மேலும் 39 லட்சம் செலவில் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், 23 தொடக்கப் பள்ளிகள், 17 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பிக்கும் முறை தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கெனவே 28 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எளிய முறையில் தொழில் உரிமம் வழங்கும் நடைமுறையிலுள்ள பட்டியலில் மேலும் சில தொழில்களை சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

3.67 கோடி செலவில் மேத்தா நகர், ஆபிசர்ஸ் காலனி முதல் தெருவினை வெங்கடாசலம் தெருவுடன் இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1.50 கோடி ஒதுக்கியுள்ளார். மீதமுள்ள 1.87 கோடியினை சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மன்ற உறுப்பினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி:

மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடுவது போல, மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேயர் பதில்: தொற்று நோய் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக அணுகுவதால் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும். மாநகராட்சியின் 6 பகுப்பாய்வுக் கூடங்களில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்து, மன்றக் கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

 


Page 38 of 111