Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

பள்ளியின் தரம் உயர்வு

Print PDF

தினமணி 07.06.2010

பள்ளியின் தரம் உயர்வு

சிவகாசி, ஜூன் 6: சிவகாசி நகராட்சி ஏ.வி.டி. நடுநிலைப் பள்ளி ஜூன் 1-ம் தேதி முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப் பள்ளியில் 6,7,8 வகுப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு மாணவிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

 

சமச்சீர் பாடப்புத்தகம் விநியோகம் அரசு, மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர ஆர்வம்

Print PDF

தினகரன் 02.06.2010

சமச்சீர் பாடப்புத்தகம் விநியோகம் அரசு, மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர ஆர்வம்

கோவை,ஜூன்.2: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளே புத்தகங்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை விடுமுறைக்கு பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிகள், அரசு நடுநி¬லைப்பள்ளிகள், அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் முதல் நாளான நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 1 மற்றும் 6 ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலையிலேயே அழைத்து சென்று பள்ளியில் சேர்த்தனர். மாநகராட்சி பள்ளிகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு மாணவர்கள் சேர அதிக ஆர்வம் காட்டியதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, தங்கள் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், மற்றும் அரசின் சலுகைகள் குறித்து பெற்றோருக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்து கூறினர்.

பள்ளி திறந்த முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகம் வழங்கப்பட்டன. இந்தாண்டு 1 மற்றும் 6ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. கோவை மாவட்டத்தில் முதலாம் வகுப்பிற்கு சென்று ள்ள 32 ஆயிரத்து 148 மாணவர்களுக்கும், 6ம் வகுப்பிற்கு சென்றுள்ள 17 ஆயிரத்து 223 மாணவர்களுக்கும் சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டன. கண்ணை கவரும் வகையில் வண்ணமயமாக புத்தகம் தயாரிக்கப்பட்டு இருந்தன. இப்புத்தகத்தை வாங்கி பார்த்த 1 மற்றும் 6 ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி; கல்விக்குழு முடிவு

Print PDF

தினமலர் 02.06.2010

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி; கல்விக்குழு முடிவு

கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தனியார் ஆங்கில பயிற்சி ஏஜன்சிகளை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வத்தை பெருக்க பள்ளிகளில் கீரை, காய்கறி பயிரிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. வசதி இல்லாத ஏழை மாணவர்கள் மட்டுமே மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பர் என்றிருந்த நிலை இன்று மாறி விட்டது. கோவை மாநகராட்சியில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகள் பொதுத் தேர்வுகளில் அதிக சதவீத தேர்ச்சியுடன், மாவட்ட அளவிலும் சிறப்பிடங்களை பிடித்து வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் முன் வரும் நிலை உருவாகியுள்ளது. அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ள ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் இடம் வாங்க, மேயர், துணை மேயர், உள்ளூர் அமைச்சர், கவுன்சிலர்களின் பரிந்துரை கடிதங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமான வளர்ச்சி, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இல்லை. இது பற்றி விவாதிக்க, மாநகராட்சி கல்விக்குழுக் கூட்டம் நடந்தது. கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை கமிஷனர் சாந்தா, கல்விக்குழுத் தலைவர் கல்யாண சுந்தரம், உறுப்பினர்கள் ஷோபனா, செந்தில், மீனா, சிவகாமி மற்றும் கல்வி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து கல்விக்குழுத் தலைவர் கல்யாண சுந்தரம் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ் மொழியில் எழுதுவதும், பேசுவதும் பாதிக்கப்படாமல் புதிய பயிற்சித் திட்டம் அமல்படுத்தப்படும். மாநகராட்சியின் 25 துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற முதல் பத்து மாணவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் "லேப் டாப்' கம்ப்யூட்டர் பரிசாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் ரத்த பிரிவு, பெற்றோர் பெயர், வீட்டு முகவரி அடங்கிய அடையாள அட்டை வழங்குவது, தேவையான பள்ளிகளில் நூலகம், லேப் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர், டாய்லெட், கூடுதல் வகுப்பறை தேவைப்படும் பள்ளிகளுக்கு உடனடியாக அவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 45 துவக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ் வழங்கும் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 19.5 லட்சம் ரூபாய் செலவிலான இத்திட்டம், "டெண்டர்' மூலம் ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, கல்யாண சுந்தரம் கூறினார்.


 


Page 56 of 111