Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி பத்தாம் வகுப்புதேர்வில் மாநில முதலிடம்

Print PDF

தினகரன்              27.05.2010

நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி பத்தாம் வகுப்புதேர்வில் மாநில முதலிடம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பள்ளியில் பயின்ற ஏழை குடும்பத்து மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். இவர் தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில்100, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நெல்லை மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சேக்தாவூது, ஜவுளிவியாபாரம் செய்துவருகிறார். தாய் நூர்ஜகான். இவரது அண்ணன் இம்ரான், நெல்லை பேட்டையில் உள்ள அரசு ஐ.டி..,யில் பயில்கிறார். தம்பி இர்வான் ஆறாம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கூடத்திற்கு எதிர்புறம் உள்ள காம்பவுண்ட் வீடு ஒன்றில் இவர்களது குடும்பம் வசிக்கிறது.

தமது படிப்பு குறித்து கூறுகையில், அன்றன்று வகுப்பில் நடத்தும் பாடங்களை இரவு ஒரு மணிவரையிலும் விழித்தாவது படித்துவிடுவேன். தேர்வு நேரங்களில் காலை 5 மணிக்கு மீண்டும் படிக்க ஆரம்பிப்பேன். நான் எப்போதுமே டிவி பார்ப்பதில்லை. மாநகராட்சி பள்ளி என்றாலும் ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துவார்கள். வகுப்பு தோழிகளும் நான் மாநில ரேங்க் வாங்குவேன் என அடிக்கடி கூறி உற்சாகப்படுத்தினார்கள். நானும் மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இதே பள்ளியில் பிளஸ் 2 பயில்வேன். பி..,இன்ஜினியரிங் முடித்துவி ட்டு ஐ..எஸ்.,படிக்க உள்ளதாக தெரிவித்தார். தற்போது 495 மதிப்பெண் பெற்றுள்ள ஜாஸ்மினுக்கு சமூகஅறிவியலில் இரண்டு மதிப்பெண் குறைந்துவிட்டது என்ற வருத்தம் உள்ளது.

நெல்லை மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் க.நடராஜன் கூறுகையில், மாநகராட்சி பள்ளி பல ஆண்டுகளாக செயல்படுகிறது.மிகவும் ஏழ்மையான மாணவிகளே இங்கு அதிகம் பயில்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளியில் மொத்தம் 2 ஆயிரத்து 800 மாணவிகள் பயின்றார்கள். ஆனால் பள்ளிக்கு அரசு வழங்கிய கட்டட வசதிகள், ஆசிரியர்களின் உழைப்பினால் தற்போது 3 ஆயிரத்து 450 மாணவிகள் பயில்கிறார்கள். பத்தாம் வகுப்பில் மட்டும் 522 பேர் எழுதினார்கள். 97 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். இந்த பள்ளி கடந்த 95ம் ஆண்டில் மாநில அளவில் 2வது, 3வது இடங்களை பிடித்தனர். கடந்த ஆண்டு மாவட்ட ரேங்க் பிடித்தனர். தற்போது மாநில முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி என்றார்.

 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்து அபாரம்

Print PDF

தினகரன்           27.05.2010

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்து அபாரம்

சென்னை : பத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்ற எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து அபார சாதனை படைத்தார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் மூலம் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 761 மாணவர்கள், நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 519 மாணவியர் என, எட்டு லட்சத்து 44 ஆயிரத்து 280 பேர், மெட்ரிக் தேர்வை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 145 பேர், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,674 பேர், .எஸ்.எல்.சி., தேர்வை 1,548 பேர் எழுதினர். இதன் முடிவுகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி நேற்று காலை வெளியிட்டார். 82.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 0.9 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 764 பேரும், மாணவியரில் மூன்று லட்சத்து 68 ஆயிரத்து 940 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 79.4 சதவீத தேர்ச்சியும், மாணவியர் 85.5. சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

வழக்கம்போல, மாணவியர் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். .எஸ்.எல்.சி., தேர்வில் 88.2 சதவீதம் பேரும், மெட்ரிக் தேர்வில் 94.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் வித்யாலயா மெட்ரிக்., பள்ளி மாணவி பவித்ரா 495 மார்க் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இந்த தேர்விலும் மாணவர்களை விட, மாணவியர் 3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.2 சதவீதம் பேரும், மாணவியர் 96.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வில் 96.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில பாடத்திட்டத்தில் நெல்லை மாவட்ட மாணவி முதலிடமும், நீலகிரி, கரூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இரண்டாம் இடமும், மூன்றாம் இடத்தை பத்து மாணவர்களும் பிடித்துள்ளனர். 15 மாணவர்களில் நான்கு மாணவர்கள் தவிர, மற்ற 11 மாணவர்களும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மாநில ரேங்க்கில், புதுச்சேரிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த 15 மாணவர்களில் ஜாஸ்மின் தவிர, மற்ற 14 மாணவர்களும், அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக்க பிரபலமான பள்ளி தேவையில்லை: நிரூபித்தார் மாநகராட்சி பள்ளி மாணவி: பிரபலமான பள்ளியில் படித்தால் தான் சாதிக்க முடியும்; அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை கருத்தை, நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்த்தெறிந்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது, பொதுமக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பள்ளிகளில் மட்டுமே, குறிப்பாக மிகப்பெரிய பள்ளிகளில் மட்டுமே, தரமான கல்வி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்ற கருத்து, பொது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால், அவரவர் வசதிகேற்ப தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தரமான கல்வியை வழங்கினாலும், மக்களிடமுள்ள மோகத்தை பயன்படுத்தி, காசு பார்க்கும் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான ரேங்க்குகளையும், பாட வாரியான ரேங்க்குகளையும், அதிகம் பெற்றவர்கள் கிராமப்புற மாணவர்கள் தான். நகர்ப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பெரிய பள்ளி என்று படையெடுப்பவர்களின் கண்களை திறக்கும் வகையில், சாதிப்பதற்கு பள்ளி முக்கியமல்ல; உழைப்பு தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார், நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

பெரிய தனியார் பள்ளிகளிலுள்ள கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், பல்வேறு வகையான கற்பிப்பு முறைகள் ஆகியவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்குமென கூற முடியாது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஓரளவுக்கு தான் வசதிகள் இருக்கும். முக்கியமாக, படிப்பில் சுமாரான மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் அட்மிஷன் கொடுப்பதில்லை. மாறாக, மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் கொடுத்து, அவர்கள் சாதனையை, தங்கள் சாதனையாக பள்ளிகள் பறைசாற்றி கொள்கின்றன. இதற்கு மத்தியில், சாதாரண பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும், அதற்கு ஈடுபாடும், முழுமையான உழைப்பும் மட்டுமே தேவை என்பதை எடுத்து காட்டியுள்ளார் ஜாஸ்மின்.

மிகவும் ஏழ்மை நிலையில் அபார சாதனை: தந்தை பெருமிதம்: மிகவும் ஏழ்மை நிலையில், மாநில அளவில் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாநில முதல் ரேங்க் பெற்ற மாணவியின் தந்தை தோவூது கூறினார். சாதனை மாணவியின் தந்தை தோவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகளின் சாதனை குறித்து தோவூது கூறியதாவது: நான் மோட்டார் சைக்கிளில் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையை பொறுத்துதான் லாபம் ஏதாவது கிடைக்கும். குறைந்தது மாதத்திற்கு ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் மாநில அளவில் முதலாவது ரேங்க் பெற்றார் என்ற தகவல் கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஒரு தந்தையாக அவளது கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஜாஸ்மின் வேறு பள்ளியில் படித்தார். 6ம் வகுப்பு முதல் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். ஆரம்பம் முதலே பள்ளியில் நன்கு படித்து முதல் ரேங்க் பெறுவார். தொடர்ந்து நன்கு படித்து, தற்போது மாநில அளவில் முதலாவது ரேங்க்கை பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் மிகவும் உறுதுணையாகவும், ஊக்கமும் அளித்தனர். எனவே, தொடர்ந்து இதே பள்ளியிலேயே படிக்க வைப்பேன். வேறு எந்த பள்ளியிலும் சேர்க்க மாட்டேன். எனது மகளின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊக்கத்தையும் அளிப்பேன். இவ்வாறு சாதனை மாணவியின் தந்தை கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி...அதிகரிப்பு: 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர் ஏராளம்

Print PDF

தினகரன்         27.05.2010

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி...அதிகரிப்பு: 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர் ஏராளம்

சென்னைசென்னை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 85.33 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 65 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 9,115 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில் 85.35 சதவீத அளவிற்கு, 7,778 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் அளவிற்கு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய 3,959 மாணவர்களில் 3,186 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,186 மாணவியரில் 4,592 தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 80.47 சதவீதமும், மாணவியர் 89.06 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,138 மாணவ, மாணவியர் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 18 மாணவ, மாணவியர் பல பாடங்களில் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

ஏழுகிணறு, சிந்தாதிரிபேட்டை, வன்னிய தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சங்கீதா, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்பு நிஷா, புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கீர்த்திகா ஆகிய மூன்று பேரும், 487 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகளில் முதல் நிலை பெற்றுள்ளனர்.

திருவான்மியூர் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆறுமுகம் 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வசந்தகுமாரி, மடுவங்கரை மாநகராட்சி பள்ளி மாணவி விஷ்ணு பிரியா 483 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். மாநகராட்சியின் 65 பள்ளிகளில், 46 பள்ளிகள் 80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.

ராயபுரம் மணிகண்ட முதலி தெரு மாநகராட்சி பள்ளி மிகக் குறைந்த அளவாக 39 சதவீத அளவிற்கு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளியில் 58 பேர் தேர்வு எழுதி 23 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்றவர்கள், துணை கமிஷனர் (கல்வி) பாலாஜியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணாக 487 பெற்ற சங்கீதா, நுங்கம் பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தந்தை கந்தவேல், ஆவின் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கிறார்."தினமும் இரவு 10 மணி வரை படித்து விட்டு, அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை தினமும் படிப்பேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன்' என, சங்கீதா கூறினார்.

புல்லா அவென்யூ மாநகராட்சி பள்ளியில் படித்த கீர்த்திகாவும் 487 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். இவரது தந்தை கருணாகரன், தனியார் நிறுவன கார் டிரைவர். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புவதாக கீர்த்திகா கூறினார்.திருவான்மியூர் சென்னை மாநகராட்சி பள்ளயில் படித்த ஆறுமுகம் 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை சுப்பிரமணி, திருவான்மியூரில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துபவர்.ஆறுமுகம் கூறும்போது, "பி.., படிக்க விரும்புகிறேன். திருவான்மியூர் பள்ளியில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தூண்டுதலால் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றேன்' என்றார்.

 


Page 58 of 111