Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளியில் 21 வகை இலவச காலை உணவு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்

Print PDF

தினமலர் 24.03.2010

மாநகராட்சி பள்ளியில் 21 வகை இலவச காலை உணவு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். காலையில் என்ன வகையான உணவு வழங்கலாம் என்பது குறித்து பரிசீலனை நடக்கிறது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாலும், அதிகாலை நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதாலும், குழந்தைகளுக்கு சமைத்துக்கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பசியோடு பள்ளிக்கு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால் படிப்பில் கவனமின்றி மாணவர்கள் சோர்வாக காணப்படுவதும் தெரியவந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டம் வழங்குவது அறிவிக்கப்பட்டது. 'கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் மாநகராட்சிக்குட்பட்ட 85 பள்ளிகளில் படிக்கும் 34 ஆயிரம் மாணவ மாணவியரின் நலன் கருதி, காலை சிற்றுண்டி பள்ளியிலேயே இலவசமாக வழங்கப்படும்' என்று மாநகராட்சி அறிவித்தது. இத்திட்டத்திற்காக அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைகழக ஊட்டச்சத்து உணவியல் துறை மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்பித்தது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களுக்கு என்னென்ன உணவு வழங்க வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளனர். அதன்படி இட்லி, இடியாப்பம், ராகிபுட்டு, ராகிரொட்டி,பருப்புபிடி, கொளுக்கட்டை, சேமியா, உப்புமா, அவல், வென்பொங்கல் உள்ளிட்ட 21 வகையான உணவு வகைகளை வழங்கலாம். இவற்றோடு ஏதாவது ஒரு பழம் மற்றும் பால் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் செலவு செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதனால் இத்திட்டத்திற்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன், வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். இது குறித்து மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:

'கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தவும், பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு சிறு தொகையை மட்டும் பயன்படுத்திவிட்டு மீதமுள்ள தொகையை எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தவில்லை. கல்விக்குழு யோசனைகளை தீர்மானங்களாக்கி, நிறைவேற்றி செயல் படுத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுகிறது. ஆனால் அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயனற்று போய் விடுகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டம் தமிழகத்தில் எங்குமே அறிவிக்கப்படவில்லை. இதை செயல்படுத்த வேண்டிய பொருப்பு அதிகாரிகளின் கையில் தான் உள்ளது' என்றார.

Last Updated on Wednesday, 24 March 2010 08:02
 

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

Print PDF

தினமணி 23.03.2010

கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

கோவை, மார்ச் 22: கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பகுதியினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் பெற்றோர்கள் தினக்கூலியாக இருப்பதால் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர்.

இதனால் பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியம் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகிறது.

அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாயின.

எனவே, மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசின் அனுமதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 23 March 2010 10:52
 

மாநகராட்சி பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல காலம்! ஆசிரியர் மனநிலையும் மாறணும்

Print PDF

தினமலர் 23.03.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல காலம்! ஆசிரியர் மனநிலையும் மாறணும்

கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளில் மட்டுமல்லாமல், கற்பிக்கும் ஆசிரியரின் மனநிலையிலும் மாற்றம் கொண்டு வர மாநகராட்சி கல்விக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வகம் நவீனம்: மாநகராட்சியின் 18 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளின் ஆய்வகங்கள் 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவுள்ளன. வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் 50 லட்சம் ரூபாய் செலவில் அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் லேப், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மாநகராட்சி காதுகேளாதோர், வாய் பேசாதோர் பள்ளி தரம் உயர்த்தப்படவுள்ளது. இப்பள்ளியின் மாணவர் விடுதிக்கு இரண்டு அடுக்கு படுக்கை வசதி, சமையல் பாத்திரங்கள், மாணவர்களுக்கு சீருடைகள், பயிற் சிக்குத் தேவையான 'ஹியரிங் எய்டு', விளையாட்டு உபகரணங்கள், ஆகிய வசதிகள் இந்த நிதியாண்டில் 25 லட்சம் ரூபாயில் நிறைவேற்றப்பட வுள்ளன. அவுட்சோர்சிங் முறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வாழ்வியல் பயிற்சிகள்: மாநகராட்சிப் பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அனைத்து துறைகளிலும் திறமையானவர்களாக மாற்ற, வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளது. படைப்பாற்றல், தலைமை பண்பு வளர்த்தல், பாடி லாங்குவேஜ், தன்னம்பிக்கை, மேடைப் பேச்சு, குறிக்கோள் அமைத்தல் உள்ளிட்ட தனித்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் இயக்கம்: மாநகராட்சிப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் இயக்கம்(இக்கோ கிளப்) துவங்கி, மாணவர்களுக்கு இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்த கல்வி வழங்கவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட் டுள்ளது.

யோகா பயிற்சி: மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நினைவாற் றலை ஒருமுகப்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

கல்விச் சுற்றுலா: மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் பொது அறிவுத் திறனை மேம் படுத்தவும், அறிவியல் அறிவை வளர்க்கவும், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர். இத்திட்டத்துக்கு, இந்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வசதியாக, 85 பள்ளிகளிலும் ரூ.25 லட்சம் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது மட்டும் போதாது: பள்ளியின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் தனித்திறன் வளர்ப்பு ஆகியவற்றை விட, தங்களை நம்பி வந்துள்ள ஏழை மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு வரும்வரை இத்திட்டங்களால் பலனில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஐந்தாறு பள்ளிகளைத் தவிர, மீதமுள்ள மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக உயரவே இல்லை. ஆசிரியர்கள்தான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்து, அவர்களை ஈடுபாட்டுடன் பாடம் கற்பிக்க செய்யவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழுக்கு 'குட்பை' : மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ரூ.8 லட்சம் செலவில் ஆங்கில நாளிதழ்கள், அறிவியல், பொது அறிவு சார்ந்த இதழ்கள் வழங்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டுள்ளது. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பல மாணவர்கள் தமிழ் படிக்கத் தெரியாத அவலநிலை உள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் தரும் ஆட்சியில், தமிழை உதா சீனப்படுத்தி விட்டு, ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே வாங்குவதால், மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

Last Updated on Tuesday, 23 March 2010 07:49
 


Page 72 of 111