Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

இந்தியாவில் முதல் முறை கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: 33,000 மாணவர்கள் பயன்

Print PDF

தினமலர் 23.03.2010

இந்தியாவில் முதல் முறை கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: 33,000 மாணவர்கள் பயன்

கோவை: இரண்டு கோடி ரூபாய் செலவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது இந்த நூதன திட்டம். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். பெற்றோர் அதிகாலையில் கூலி வேலைக்கு சென்று விடுவதால், பல குழந்தைகள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வருவது, மாநகராட்சிக் கல்விக்குழுவின் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் ஊட்டச்சத்து உணவியல் துறையிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டது. ஆய்வு பணிக்காக ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பல்கலை அளித்த அறிக்கையில், பெரும்பாலான மாணவ, மாணவியர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் காலை வேளையில் சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 85 மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடையும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இத்திட்டம், மாநகராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாநகராட்சிக் கல்விக்குழுத் தலைவர் கல்யாண சுந்தரம் இது பற்றி கூறியதாவது: ஆறு மாதங்களாக இது பற்றி ஆய்வு நடத்தி வந்தோம். ஆய்வில் மாணவர்களின் உடல் சார்ந்த சில குறைகள் கண்டறியப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், 33,000 மாணவர்களுக்கு தினமும் உணவு சமைக்க வேண்டும் என்பதால், எந்தவித சுகாதார சீர்கேடுகளும் நேராதவாறு கவனமாக நிறைவேற்ற வேண்டிய திட்டமாக உள்ளது. திட்டத்துக்கு அனுமதி கிடைத்தவுடன், அனைத்து கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பாக நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்வோம். வரும் கல்வியாண்டு முதல் நிறைவேற்றப்படும். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் உடல் நலம் மேம்படும் என்பதால், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்; மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயரும், என்றார்.

Last Updated on Tuesday, 23 March 2010 07:45
 

ஏழை மாணவர்களுக்கு காலை டிபன் ரெடி ; கோவை மாநகராட்சி பளீச் திட்டம் அறிவிப்பு

Print PDF

தினமலர் 23.03.2010

ஏழை மாணவர்களுக்கு காலை டிபன் ரெடி ; கோவை மாநகராட்சி பளீச் திட்டம் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் இலவசத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராஜர் காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெ., ஆகியோர் ஆட்சி காலத்தில் போஷாக்கான உணவுடன் கவர்ச்சியும் இணைந்த முட்டை கீரை என பல வடிவங்கள் பெற்றது. சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கோடிக்கணக்கான மாணவ , மாணவிகள் மதிய உணவு உட்கொண்டு தங்களது படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த தருணத்தில் புதுமையான திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்றைய பட்ஜெட்டில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ. கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மேயர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தாக்கலான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியானதும் ஆளும் தி.மு.., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

கமிஷன் ஆய்வுக்கு பின்னர் முடிவு : கோவை மாநகராட்சி கல்விக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர் ஆய்வு நடத்த ஓரு குழு அமைக்க கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இந்த ஆய்வு குழு படி தாக்கல் செய்த அறிக்கையில் ; கோவையில் ஏழை மாணவர்கள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் வறுமை காரணமாக காலை உணவு கிடைக்காத போது பள்ளிக்கு செல்ல வேண்டுமா என்று எண்ணத்தோன்றும். எனவே அவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கக்கூடாது என்றும் , இதற்கு காலை சிற்றுண்டி வழங்கினால் நலம் என தெரிவித்தது. இதன்படி மாணவ, மாணவிகளின் உடல் நலன் மற்றும் கல்வி அறிவை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 85 பள்ளிகளில் முதற்கட்டமாக ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வகையான உணவுகள் வழங்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வர். இந்த திட்டத்தில் 33 ஆயிரம் பேர் பயன்பெறுவர். இந்த காலை சிற்றுண்டி திட்டம் இந்தியாவிலேயே இல்லாத திட்டம் என்பதால் பிற மாநிலங்களிலும், தமிழகத்தில் பிற மாநகராட்சிகளும் இந்த புதிய திட்டத்தை பின் பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Tuesday, 23 March 2010 07:51
 

பாழடைந்த சத்துணவு கூடத்தை புதுப்பிக்க ரூ.6 லட்சம் ஒதுக்கீடு முந்துபவர்களுக்கு முன்னுரிமை

Print PDF

தினமலர் 18.03.2010

பாழடைந்த சத்துணவு கூடத்தை புதுப்பிக்க ரூ.6லட்சம் ஒதுக்கீடு முந்துபவர்களுக்கு முன்னுரிமை

அரக்கோணம்:வேலூர் மாவட்டத்தில் பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடங் களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் ஒன்றியம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களில் சில பாழடைந்த நிலையிலும், சுகாதாரம் இல்லாமலும் நிலை யிலும் உள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் போது, எதிர்பாராத விதமாக சாம்பாரில் பல்லி, சாதத்தில் புழு, பூச்சிகள் விழுந்து விடுகின்ற. இந்த உணவுகளை மாணவர்களுக்கு பரிமாறும் போது வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 60 பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களை புதுப்பிக்க தலா 10 ஆயிரம் வீதம் 6 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் தலா 2 பள்ளிகள் வீதமும், மீதமுள்ள 20 பள்ளிகள், நகராட்சி பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியை பெற, அந்தந்த பி.டி.., அலுவலக சத்துணவு பிரிவு அதிகாரிகள், சம்பந்தப் பட்ட சத்துணவு கூடத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, அறிக்கையை மாவட்ட திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த நிதி ஒதுக்கீடு, முதலில் முந்துபவர்களுக்கே அதாவது முதலில் அறிக்கை அனுப்புவர்களுக்கே கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட அதிகாரிகள், பாழடைந்த சத்துணவு கூடங்களுக்கு 'விசிட்' செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.

Last Updated on Thursday, 18 March 2010 07:13
 


Page 73 of 111