Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

ரூ1.25 கோடி செலவில் 67 பள்ளிகளில் நூலகம் நாளை திறக்கப்படும் மேயர் தகவல்

Print PDF

தினகரன்             30.11.2010

ரூ1.25 கோடி செலவில் 67 பள்ளிகளில் நூலகம் நாளை திறக்கப்படும் மேயர் தகவல்

பூந்தமல்லி, நவ.30: ரூ1 கோடியே 25 லட்சம் செலவில் 67 சென்னை பள்ளிகளில் நூலகங்கள் நாளை திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் பாடசாலை தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நேற்று சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசியதாவது:

சென்னை பள்ளிகள், தனியார் பள்ளிக்கு இணையாக கட்டிட வசதி, சுத்தமான குடிநீர், உயர்தர கல்வி என சிறப்பான கல்வியை அளித்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி 67 சென்னை பள்ளிகளில் நூலகம் தொடங்கப்படுகிறது. இதற்காக புத்தகங்களை வாங்க, ரூ1 கோடியே 25 லட்சத்தை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. ஒரு நூலகத்துக்கு 2,500 முதல் 3 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்படும்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் பழம், ரொட்டி வழங்கப்பட்டது. இது சில மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், இந்தாண்டு முதல் பிஸ்கெட் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ49 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் அபாக்ஸ் என்ற சீன கணக்கு முறை கல்வி கற்றுத்தரப்படும். இவ்வாறு மேயர் கூறினார். விழாவில், மாநகராட்சி துணை மேயர் சத்தியபாமா, கல்வித்துறை துணை ஆணையர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ1.24 கோடி மோசடி

Print PDF

தினகரன்               29.11.2010

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ1.24 கோடி மோசடி

மும்பை,நவ.29: மும்பை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்கும் வகையில் அவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்த, தினம் ஒரு ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ1.24 கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி பள்ளில் படிக்கும் மாணவிகள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக்கு வரும் நாட்களுக்கு தினம் ஒரு ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மாநகராட்சி பள்ளிகளில் தற்போது இரண்டு லட்சம் மாணவிகள் வரை படிக்கின்றனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் வரை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதாக தெரிய வந்துள் ளது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1.24 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2007&08ம் ஆண்டு 146922 மாணவிகளுக்கு தினம் ஒரு ரூபாய் திட்டத்தின் கீழ் 2.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 62 ஆயிரம் மாணவிகளுக்கு இந்த நிதி போய் சேரவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 1.24 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

இந்த நிதி மாநகராட்சியின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட மாணவிகளுக்கு போய் சேரவில்லை. இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் அர்விந்திடம் கேட்டதற்கு, "அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகுதான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்" என்று தெரிவித்து விட்டார். மாநகராட்சி தேர் தல் நெருங்கும் நிலையில் புதிய ஊழல் தலையெடுத்திருப்பது சிவசேனா கூட்டணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நகராட்சிப் பள்ளியின் அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்

Print PDF

தினமணி             25.11.2010

நகராட்சிப் பள்ளியின் அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்

விழுப்புரம், நவ. 24: விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் தெரிவித்தார்.

பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 176 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அவர் பேசியது: ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆட்சியில்தான் நிவர்த்தி செய்யப்பட்டது. அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

நாம் இந்த பள்ளிக்கு செய்ய வேண்டியது இன்னும் உள்ளது. கூடைப்பந்து ஆடுகளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இன்னும் ஓர் ஆண்டுதான் நகர்மன்றம் உள்ளது; அதற்குள் அனைத்துப் பணிகளும் செய்யப்படும்.

இப்பள்ளியின் தரத்தை நாங்கள் உயர்த்திக் காட்டுகிறோம். நீங்கள் நன்றாகப் படித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.கற்பகமூர்த்தி தலைமை தாங்கினார், பொருளாளர் எம்.ராமதாஸ், தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 


Page 32 of 111