Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

எல்லா மாநகராட்சி பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை

Print PDF

தினகரன்                11.11.2010

எல்லா மாநகராட்சி பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி, நவ. 11: மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப பள்ளிகளையும், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும், எல்லா பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்றவும் மாநகராட்சி புதிய திட்டத்தை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்விக் குழு தலைவர் மஹிந்தர் நாக்பால் கூறியதாவது:

கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் சிறப்பாக அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டும் அனைத்து ஆரம்ப பள்ளிகளையும் தரம் உயர்த்தி நடுநிலை பள்ளிகளாக ஆக்குவது, எல்லா பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்றுவது ஆகியவை குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவது, ஆரம்ப பள்ளியில் இருந்து நடுநிலை பள்ளி வரையில் கல்வி கற்பதை நீட்டிக்கச் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்வது, இரட்டை ஷிப்ட் திட்டத்தை மாற்றுவது, இருபாலர் கல்வி நிலை, எல்லா பள்ளிகளுக்கும் ஒரே நேரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் திட்டத்தின்படி, புதிதாக 40 பள்ளி கட்டிடங்களை கட்டுவது, குடிநீர் வசதி அளிப்பது, நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், சிறந்த பர்னிச்சர்கள் ஆகிய வசதிகளும் செய்து தரப்படும். இத்திட்டத்தை நிறைவேற்ற கூடுதலாக ரூ1,600 கோடி நிதி வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளில் கைரேகை பதிவு வருகைப்பதிவு இயந்திரத்தை அமல்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய முடியும். இதனால் புதிய திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளில் இந்த கருவிகள் பொருத்தப்படும். இதேபோல், ஆண்டுதோறும் மாணவர்களின் பதிவேடு பராமரிக்கப்படும். மாநில அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

டெல்லி துணைநிலை சேவைகள் தேர்வு குழுவிடம், புதிதாக 10,000 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டு ள்ளோம். இதில் ஆரம்ப மற்றும் நர்சரி பள்ளி ஆசிரியர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் ஆகியோரும் அடங்குவர். இவ்வாறு மஹிந்தர் நாக்பால் கூறினார்.

 

பள்ளிகளிடை வாலிபால்: மாநகராட்சிப் பள்ளி முதலிடம்

Print PDF

தினமணி                    08.11.2010

பள்ளிகளிடை வாலிபால்: மாநகராட்சிப் பள்ளி முதலிடம்

கோவை, நவ. 7: நீலம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் கோவை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்தனர்.

கதிர் கல்லூரியில் கலை, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. 36 பள்ளிகளில் இருந்து ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப் போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹெபாசிட் இயகோகா நிறுவன நிர்வாக இயக்குநர் என்.சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கிப் பேசினார். கல்லூரி தாளாளர் இ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்:

வாலிபால் மாணவர்கள் பிரிவில் முதலிடம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி, 2ம் இடம் சிஆர்ஆர் மேல்நிலைப் பள்ளி, 3ம் இடம் மணி மேல்நிலைப் பள்ளி. மாணவியர் பிரிவில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. சின்னதடாகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பிஎஸ்ஜிஜி கன்யா குருகுலம் பள்ளி முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

அறிவியல் கண்காட்சியில் பத்மாவதி அம்மாள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. கன்யா குருகுலம் பள்ளி 2ம் இடத்தையும், சாந்தி மெட்ரிக் பள்ளி 3ம் இடத்தையும் பிடித்தது. விநாடி வினா போட்டியில் முதலிடம் லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 2ம் இடம் பிஎஸ்ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளி.

இதேபோல, தமிழ்-ஆங்கிலம் பேச்சு, கட்டுரைப் போட்டிகள், பாட்டு, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு நகரம் முழுவதும் சிறப்பு பள்ளி

Print PDF

தினகரன்                08.11.2010

பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு நகரம் முழுவதும் சிறப்பு பள்ளி

புதுடெல்லி, நவ.8: டெல்லி பிச்சைக்காரர்களின் நலவாழ்வுக்காக மாநில அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளது. சமூக நலத்துறை கணக்குப்படி டெல்லியில் 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 30 சதவீதத்தினர் சிறுவர், சிறுமியர். 69.94 சதவீதம் பேர் ஆண்கள். 30.06 சதவீதம் பேர் பெண்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்ததை ஒட்டி டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் பிச்சைக்காரர்களை கட்டாயப்படுத்தி நகரை விட்டு வெளியேற்றவில்லை என அரசு மறுத்தது. இந்நிலையில் டெல்லி பிச்சைக்காரர்களின் நலவாழ்வுக்காக புதிய சட்டம் கொண்டுவரும் பணியில் மாநில அரசு இறங்கியுள்ளது. இச் சட்டத்தின்படி நகரில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். தங்குமிடம் தரப்படும். சில தொழிற்பயிற்சிகளையும் தர அரசு திட்டமிட்டிருக்கிறது.

பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களின் நிலை குறித்த முழுமையான விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்.

‘‘தலைநகர் பிச்சைக்காரர்களின் பிரச்னையை தீர்க்க, மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும்’’ என்று மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிச்சை எடுக்கும் பழக்கத்தை தவிர்த்து, அவர்களுக்கு புதிய வாழ்க்கை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த சட்டப்பிரிவு இயற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக நகர் முழுவதும் சிறப்பு பள்ளிகள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது

 


Page 34 of 111