Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் ஆன்-லைன் கேமரா மூலம் கண்காணிப்பு

Print PDF

தினமலர்          06.05.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் ஆன்-லைன் கேமரா மூலம் கண்காணிப்பு

சேலம்: சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை ஆன்-லைன் கேமரா மூலம் கண்காணிக்கும் வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி 91.34 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. மாநகரில் எட்டு ட்சம் பேர் வசித்து வருகின்றனர். சேலம் மாநகரில் நாள்தோறும் 360 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கழிவுகள் எருமாபாளையம், சூரமங்கலம், வீராணம், மணியனூர் ஆகிய இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. பெருபான்மையான குப்பைகள் எருமாபாளையம் குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நிலத்தடி நீரும் மாசுபட்டது. அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, சேலம் மாநராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக செட்டிசாவடி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக தமிழக அரசு 100 ஏக்கர் நிலம் வழங்கியது.

கடந்த 2008ல் சேலம் மாநகராட்சியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் நவீன முறையில் தரம் பிரித்து உரமாகவும், சுனுகு எரிபொருளாகவும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிக்கவும், எஞ்சிய திடக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் நிலத்தடி நீர் மாசுபடாத வகையில் நிரப்புவதற்கு உரிய நிரப்பு கலன், சுத்திகரிப்பு நிலையம், போன்றவற்றை கட்டி இயக்கி உரிமம் மாற்றுதல் முறையில் செயல்படுத்தவும் டெண்டர் விடப்பட்டது. மூன்று கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தபுள்ளிகள் வரப்பெற்றன. தகுதியின் அடிப்படையில் குஜராத் என்விரோமென்ட் புரடெக்சன் இன்பராஸ்டிரக்சர் லிமிடெட் என்று நிறுவனத்துக்கு 2009 ஃபிப்ரவரியில் பணி ஆணை வழங்கப்பட்டது. செட்டிசாவடிக்கு செல்லும் சாலையானது கோரிமேடு முதல் செட்டிசாவடி திடக்கழிவு திட்ட பகுதி வரையிலும் 5.5 கி.மீ., தூரம் ஆகும். இந்த பகுதி சாலை குண்டும் குழியுமாக சீரழிந்து காணப்பட்டது.

கட்டுமான பொருட்கள் மற்றும் குப்பைகளை எடுத்து செல்வதற்காக இந்த சாலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மாநகராட்சி எல்லை முதல் திடக்கழிவு செயலாக்க பகுதி வரை 2.230 கி.மீ., நீளத்துக்கு சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டது. இரண்டாவது கட்டமாக கோரிமேடு முதல் கோம்பைப்பட்டி வரையில் 1.35 கி.மீ., நீளத்துக்கு சாலை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோம்பைப்பட்டி முதல் குண்டத்துமேடு வரை 1,825 மீட்டர் சாலை பல லட்சம் ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தி அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

செட்டிசாவடி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது சேலம் மாநகராட்சியில் இருந்து குப்பைகளை எடுத்து செல்லும் லாரிகள் செட்டிசாவடி பகுதிக்குள் நுழைவது, அங்கு குப்பைகளை தரம் பிரித்து பணி மேற்கொள்வது ஆகியவற்றை மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கும் வகையில் ஆன்-லைன் கேமரா வசதி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் குப்பை சேகரித்து தரம் பிரிக்கும் பணியில் குளறுபடிகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:19