Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இலவசமாகப் பெறும் முறை அறிமுகம்

Print PDF

தினமணி 21.07.2010

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இலவசமாகப் பெறும் முறை அறிமுகம்

திருநெல்வேலி, ஜூலை 20: திருநெல்வேலி மாநகராட்சியில் கணினி மூலம் (ஆன்லைன்) இலவசமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறும் முறையை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.

இதுகுறித்து மேயர் அ.லெ.சுப்பிரமணியன், ஆணையர் டாக்டர் சுப்பையன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

இம் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் நான்கு வார்டு அலுலகங்கள் மற்றும் 17 அலகு அலுவலகங்கள் மூலம் உதவி நகர்நல அலுவலர், உதவி ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பொதுமக்கள் மனு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இதற்காக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் உள்ளது.

பொதுமக்களின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், முதல் கட்டமாக 2000ஆம் ஆண்டுமுதலான பிறப்பு, இறப்பு விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அவற்றின் நகலை கணினி மூலம் (ஆன்லைன்) பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

இம் மாநகராட்சியின் இணையதளம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் பொதுமக்கள் பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இப்போது பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரி இனங்களை கணினி மூலம் செலுத்தும் நடைமுறையையும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 25 கோடி வரி பாக்கி: இம் மாநகராட்சியில் நீண்டகால வரிபாக்கியாக ரூ.25 கோடி வரை உள்ளது. இவற்றை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் நடைபெற்று வரும் தீவிர வரிவசூல் முகாமிற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்டநாள்களாக வரி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு, வரியை வசூலிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

மாநகராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு நீண்ட நாள்களாக வாடகைக்கு விடப்படாத கடைகளை வாடகைக்கு விடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பயனாக தற்போது ஐந்தாறு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. எஞ்சி இருக்கும் சுமார் 15 கடைகளையும் வாடகைக்குவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

பேட்டியின்போது, மண்டலத் தலைவர்கள் விஸ்வநாதன் (திருநெல்வேலி), எஸ்.எஸ். மைதீன் (மேலப்பாளையம்), மாநகர பொறியாளர் ஜெயசேவியர், செயற்பொறியாளர் நாராயணநாயர் ஆகியோர் உடனிருந்தனர்.