Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பட்ஜெட்டில் அறிவிப்பு பெங்களூர் மாநகராட்சி கம்ப்யூட்டர் மயமாகிறது

Print PDF

தினகரன் 31.08.2010

பட்ஜெட்டில் அறிவிப்பு பெங்களூர் மாநகராட்சி கம்ப்யூட்டர் மயமாகிறது

பெங்களூர், ஆக.31: பெங்களூர் மாநகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாவது: மாநகராட்சி மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நோக்கத்தில் பிறப்பு&இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதி செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோருக்கு அஞ்சல் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து செல்வது தவிர்க்கப்படும். மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளில் 15 நாளுக்கு ஒருமுறை மக்கள் குறைகேட்டு நிகழ்ச்சியை கவுன்சிலர்கள் நடத்த வேண்டும். அதேபோல் மேயர், துணைமேயர் ஆகியோர் 15 நாளுக்கு ஒருமுறை சட்டப்பேரவை தொகுதிகளில் மக்கள் குறைகேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தனி அறை திறக்கப்படும். மேலும் மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரி, ஊழியர்கள் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவேடு அமைக்கப்படும். மாநகராட்சியின் சட்டத்துறையை பலப்படுத்தும் நோக்கத்தில் திறமையாக செயல்படும் வழக்கறிஞர்களை கூடுதலாக நியமனம் செய்யப்படும். மாநகராட்சி மூலம் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த விடப்படும் டெண்டர் வெளிப்படையாக இருக்கும் வகையில் புதிய கொள்கை அமல்படுத்தப்படும். மாநகராட்சியின் செயல்பாட்டை வேகப்படுத்த மனிதவள மேம்பாட்டு பிரிவு அமைக்கப்படும்.

மாநகராட்சியின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் வகையில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். கடந்த 2008 ஏப்ரல் 1ம் தேதி முதல் தற்போது வரை மாநகராட்சி மூலம் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து எந்த திட்டம் செயல்படுத்தினாலும், அவை அனைத்தும் கம்பியூட்டரில் பதிவு செய்யப்படும். மாநகராட்சியில் லஞ்ச&ஊழலுக்கு எதிராக வரும் புகார்களை கவனமுடன் கண்காணித்து தவறு செய்யும் அதிகாரி, ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் சதாசிவா தெரிவித்தார்.