Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கணினி வசதி தொடக்கம் வார்டு ஆபீசிலேயே சொத்து வரி செலுத்தலாம்

Print PDF

தினகரன் 15.09.2010

கணினி வசதி தொடக்கம் வார்டு ஆபீசிலேயே சொத்து வரி செலுத்தலாம்

சென்னை, செப். 15: வார்டு அலுவலகங்களிலேயே கணினி மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் நேரில் வரும் ஊழியர்களிடமும் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மற்றும் ஆன்லைன் மூலமும் சொத்துவரி செலுத்துகின்றனர். ரிப்பன் மாளிகைக்கு சென்றும் வரியை செலுத்தலாம்.

வார்டு அலுவலகத்திலேயே கணினி மூலம் சொத்துவரி செலுத்தும் புதிய சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள 126வது வார்டு அலுவலகத்தில் இந்த திட்டத்தை மேயர் மா.சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது மேயர் கூறியதாவது:

2006ல் இந்த நிர்வாகம் பொறுப்பேற்ற போது சொத்துவரி வசூலிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சொத்துவரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு கையடக்க நவீன கருவி வழங்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காகவும், எளிதில் மிக விரைவாக சொத்துவரி செலுத்துவதற்காகவும் 155 வார்டு அலுவலகங்களிலும் கணினி மூலம் சொத்துவரி செலுத்தும் புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இதற்காக ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் இணையதள வசதியுடன் ரூ. 50 லட்சம் செலவில் கணினிகள் நிறுவப்பட்டுள்ளது. சொத்துவரி வசூல் 2005&2006ம் ஆண்டு ரூ.232 கோடியாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 2009&10ல் ரூ.362 கோடியாகி உள்ளது.

நிர்வாக சீரமைப்பு மேற்கொண்டதன் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளில் சொத்துவரியை உயர்த்தாமலே வசூல் அதிகரித்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வசதி மூலம் எதிர்காலத்தில் சொத்துவரி வசூல் அதிகரிக்கும். எந்த வார்டு அலுவலகத்தில் வேண்டுமானாலும் சொத்துவரி செலுத்தலாம். வார்டு அலுவலகத்தில் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொத்துவரி செலுத்தலாம்.

இவ்வாறு மேயர் கூறினார்.

மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டலக்குழு தலைவர் ஏழுமலை, கோட்டப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள 126வது வார்டு அலுவலகத்தில், கணினி மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய வசதியை தொடங்கி வைக்கிறார் மேயர் மா.சுப்பிரமணியன்.