Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கோட்டையில் தொடுதிரை தகவல் மையம் மேயர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன் 21.09.2010

செங்கோட்டையில் தொடுதிரை தகவல் மையம் மேயர் திறந்து வைத்தார்

புதுடெல்லி, செப். 21: காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக செங்கோட்டையில் தொடு திரை தகவல் மையம்அமைக்கப்பட்டுள்ளது. அதை மேயர் பிருத்விராஜ் சகானி நேற்று திறந்து வைத்தார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியை காண வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிதில் கிடைக்க மாநகராட்சி தீர்மானித்தது. அதற்காக செங்கோட்டையில் சிறப்பு தொடு திரை தகவல் மையம்அமைக்கப்பட்டுள்ளது. இதை மேயர் பிருத்விராஜ் சகானி நேற்று திறந்து வைத்தார்.

தொடு திரையில், டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கும் மைதானங்கள், அவை இருக்கும் இடம், அவற்றுக்கு செல்லும் வழிகள், போக்குவரத்து விவரம், இதற்கான கட்டண விவரம், ஓட்டல்கள் & கட்டண விவரங்கள், உணவு வகைகள், இரவு விடுதிகள், அங்கு இருக்கும் வசதிகள், காவல் நிலையங்கள், காப்பகங்கள், டெல்லியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், சுற்றுலா மையங்கள், நகரைச் சுற்றியுள்ள ஆக்ரா, ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நகரங்களின் வரலாறுகள், நகரில் இருக்கும் உடனடி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) இருக்கும் இடம் போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும்.

கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள இதில் எந்த தகவலை தெரிந்து கொள்ள விரும்பினாலும், கம்ப்யூட்டரின் திரையை தொட்டால் போதும்; அனைத்து தகவல்களும் வரிசையில் வந்து நிற்கும்.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான மொழியில் இந்த தகவல்களை தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 மொழிகளில் இந்த தகவல்களை பெறலாம். இதுபோன்று மொத்தம் 40 தகவல் மையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்படுகின்றன.