Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓசூர் நகராட்சியில் கணினி வருகை பதிவேடு : வேலைக்கு வராத ஊழியர்களுக்கு ஆப்பு

Print PDF

தினமலர் 05.02.2010

ஓசூர் நகராட்சியில் கணினி வருகை பதிவேடு : வேலைக்கு வராத ஊழியர்களுக்கு ஆப்பு

ஓசூர்: ஓசூர் நகராட்சி அலுவலகத்தில், அலுவலர்கள், பணியாளர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை தடுக்க, புகைப்படத்துடன் கூடிய கைரேகை கணினி வருகை பதிவேடு மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் பொதுசுகாதாரம், நகரமைப்பு, பொறியல், வரிவசூல் பரிவு மற்றும் பொதுப்பிரிவு ஆகிய துறைகள் செயல்படுகிறது. இங்கு மொத்தம் 100க்கும் மேற்பட்ட அலுவலக பணியாள்களும், 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் பணிபுரிகின்றனர். அலுவலக பணியாளர்கள் தினம் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிகின்றனர். துப்புரவு பணியாளர்கள் அதிகாலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் பணிபுரிகின்றனர்.

கடந்த காலத்தில் நகராட்சி அலுவலகத்தில் குறைந்த பணியாளர் வேலை செய்தனர். அதனால், அவர்களை உயர் அதிகாரிகள் கண்காணித்து எளிதில் வேலைவாங்கி வந்தனர். பணியாளர்களும், மேல் அதிகாரிகளுக்கு பயந்து அலுவலக நேரத்துக்கு சரியாக வந்து மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வேலை செய்தனர். பணியாளர் வருகை குறித்த அலுவலக வருகை பதிவேடுகளை தினம், கமிஷ்னர் கண்காணித்து வந்ததால், வருகை பதிவேட்டிலும் எந்த முறைகேடும் நடக்கவில்லை. சில ஆண்டுகளாக, பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நகர எல்லை விரிவாக்கத்துக்கு தகுந்தவாறு, நகராட்சியில் அதிகளவு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் வேலை செய்யும் நேரம், வேலை செய்யாத நேரம் மற்றும் அலுவலகத்துக்கு வரும் நேரம் ஆகியவற்றை அதிகாரிகளால் தினம் கண்காணிக்க முடியவில்லை.

அதிக வேலைப்பளு காரணமாக, அதிகாரிகளும் வருகை பதிவேடுகளை முறையாக கண்காணிக்கவில்லை. அதை சாதகமாக பயன்படுத்தி, அலுவலக பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் வருகை பதிவேட்டை பராமரிக்கும் ஊழியர்களை கைக்குள் போட்டு கொண்டு, தினம் பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து விட்டு, வட்டிக்கு பணம் விடுவது, வியாபாரம் செய்வது உள்ளிட்ட சொந்த வேலைகளுக்கு சென்றனர். அதனால், அலுவலக பணியில் மட்டுமின்றி சுகாதார பணிகளும் தேக்கமடைந்தது. நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும், பணியாளர் வருகையை ஒழுங்காக பராமரித்து, அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் தற்போது அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர் வருகை பதிவேடு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி தலைவர் சத்யா கூறியதாவது: நகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊழியர்களின் வருகை பதிவு முறையும் கணிணிமயமாக்கப்பட்டுள்ளது. அலுவலக வாயில் பகுதியில், கைரேகையை பதிவு செய்து ஃபோட்டோ எடுக்கும் கணினி வருகை பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. தினம் காலையில் பணிக்கு வரும் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கணினி வருகை பதிவேட்டில் தங்களுடைய கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்தவுடன், அந்த பணியாளருடைய புகைப்படம் தெரியும். புகைப்படம் தெரிந்தால், அவருடைய வருகை உறுதி செய்யப்படும். பின், அவர் வழக்கம்போல் அலுவலக பணிகளை மேற்கொள்ளலாம். பணி முடிந்து வெளியே செல்லும்போதும், பணியாளர்கள் கணினி வருகை பதிவேட்டில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். கணினி வருகை பதிவேடு மூலம் இனி அலுவலர்கள் அலுவலகத்துக்கு வராமல் ஏமாற்றுவது முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 05 February 2010 07:03