Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் புவியியல் மையம் துவக்கம் : தகவல்களை அறிந்து கொள்ள புது வசதி

Print PDF

தினமலர் 08.04.2010

மாநகராட்சியில் புவியியல் மையம் துவக்கம் : தகவல்களை அறிந்து கொள்ள புது வசதி

கோவை: கோவை மாநகராட்சி குறித்த தகவல்களை எளிதாக திரையில் காண 'தொடு திரை புவியியல் மையம்' ஒன்றை, டி.சி.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து, மாநகராட்சி உருவாக்கி வருகிறது. கோவை மாநகராட்சியில் 72 வார்டுகளில் குடிநீர், சுகாதாரம், பாதாள சாக்கடை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. சொத்துவரி, வர்த்தகவரி, குடிநீர்வரி ஆகியவை வசூலிக்கப்படுகின்றன. பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாதாளசாக்கடை, நவீன குப்பை மாற்று நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியின் புவியியல் அமைப்பு, தட்பவெப்பம், மழைபெய்யும் மாதங்கள், மழையளவு, பனி மூட்டத்தின் நிலை போன்ற இயற்கை சூழல்களை, மாநகராட்சி பணியாளர்கள் கணக்கெடுக்கின்றனர். இவை அனைத்தும், புவியியல் மையத்தில் பதிவு செய்யப்படும். கோவை மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் அனைத்து புள்ளி விரபங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மாதிரி வார்டுகளான 60, 27, 16, 49 ஆகிய வார்டுகளில் புவியியல் மையத்திற்கான தகவல் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் துறை சார்ந்து தனித்தனியாக இனம் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை 21 வார்டுகளில் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. மீதமுள்ள 47 வார்டுகளில் பணிகள் நடக்கின்றன.

தகவல்கள் அனைத்தும் சேகரம் செய்யப்பட்டவுடன் கோவை நகரிலுள்ள ஒரு வீடு அல்லது அங்காடிக்கடையில் இருக்கும் வசதிகள் அனைத்தையும் மாநகராட்சி அலுவலகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். வீட்டு கட்டட அமைப்பு, முகப்பு தோற்றம், எவ்வளவு அறை, என் னென்ன அறை, வரி செலுத்தப் பட்டுள்ளதா, இல்லையா, எவ்வளவு செலுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒட்டு மொத்த மாநகராட்சி பகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் மாநகராட்சியிலுள்ள தொடுதிரை தகவல் மையத்தில் வைக்கப்படும். தகவல் சேகரம் செய்யப்படும் பணியை தொடர்ந்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தொடு திரை தகவல் கருவிகள் அமைக்கப்படும். அங்குவரும் பொதுமக்கள் தகவல்களை எளிதாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Last Updated on Thursday, 08 April 2010 06:38